Thursday, October 4, 2012

Thursday, September 13, 2012

சர்க்கரை வைத்தியம்..




“ரொம்ப இனிக்குதுடா... என்றார்
கண்கள் பனிக்க தாத்தா
முத்தமிட்ட பாப்பாவிடம்

“நிஜமாவா,..??? அச்சட்ச்சோ!!
இனிமே ரெண்டு மட்டும் தாரேன்
டாக்டர் கிட்ட சொல்லாத வென்று
பத்தியவைத்தியம் சொல்லிற்று பாப்பா
சர்க்கரை வியாதி தாத்தாவுக்கு....!!!

Wednesday, August 29, 2012

பேண்ட் எய்டு a.k.a மருந்துப் பட்டை



அது வரை அழுது கொண்டிருந்த இனியாக் குட்டிக்கு
கலர் கலராய் பொம்மைகள் ஆடிய “பேண்ட் எய்டு
ஒட்டியதும், ஒடிப் போயிருந்தது
முட்டியில் சிராய்த்த வலி...!!!

இது காயத்தை மட்டுமல்ல,
தழும்பினையும் அழகாய் மறைத்து ஆற்றுமாம்..
எல்லாம் தெரிந்திருந்தது குட்டி செல்லத்திற்கு!

“பெரியவங்களுக்கு பொம்மை பேண்ட் எய்டு இல்லியாம்மா?
யோசித்தப் படி கேட்டது வாழ்வின் அடுத்த அடி எடுக்க...

எப்படி சொல்வது...?
பெரிய தாத்தா நெற்றியில் இட்டுருக்கும் திருநீறும்...
மாமா சொல்லும் “எல்லாம் முடியும் கதைகளும்...
வரன் தகையா டீச்சர் சித்தியின் அனாதை இல்ல பராம்மரிப்பும்..
கைம்பெண் பால்காரம்மாவின் வாஞ்சையும், புன்சிரிப்பும்..
ஏன், நான் வளர்க்கும் பட்டாம் பூச்சி பூந்தோட்டமும் கூட...
வாழ்வு தந்த காயங்களுக்கு போட்டுக் கொண்ட
ர்புல் பேண்ட் எய்டு என்று!!!



Tuesday, July 10, 2012

ரெடி, லைட்ஸ், கேமரா, ஆக்க்ஷன் - 4


இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வானது, ஏறக்குறைய பாட்டியுடன் படம் பார்த்த அதே காலக் கட்டத்தில், கி.பி. இருபதாம் நூற்றாண்டின் கடைசியில், நிகழ்ந்ததாக அகழ்வாராய்ச்சி வல்லுனர்களால் சொல்லப்படுகிறது.

மறுபடியும் கொசுவத்திச் சுருளச் சுத்தறேன்...

அப்போ நாங்க முஸ்லிம் தெருவுல வாடகைக்கு இருந்தோம். நாலாவது தெருன்னு நினைக்கிறேன். வித்தியாசமா கலர் கலரா முக்கோணம், சதுரம், செங்கோணம், அரக்கோணம் மாதிரியான டிசைன் உள்ள பீங்கான் ஸ்லாப்ஸ் தரையிலையும், பாதி சுவர் வரையும் பதிச்ச வீடு.



சுவற்றோட பெரிய கண்ணாடி வச்ச அலமாரிகள் அமைந்த அறைகள், மொட்ட மாடிக்குப் போக மரத்தாலான படிக்கட்டு, புறக்கடை, பின்னால சமையல்கட்டுக்கு மட்டும் ஓடு வேய்ஞ்சிருக்கும்,,அப்பறம் முன்னால ரொம்ப பெரிய திண்ணை அத முழுசா மூடி கிரில் போட்டிருக்கும்,...இப்படி இது என்ன ஆர்க்கிடெக்கசரோ அந்த கொத்தனாருக்குத் தான் வெளிச்சம்.
நானும் என் தங்கையும் அந்த திண்ணைல தான் விளையாடனும்முன்னு எங்கம்மா கண்டிஷனா சொல்லிருவாங்க. நாங்களும் ஸூவுல, கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்ட குரங்குங்க மாதிரி ( நான் பண்ண சேட்டைக்கு குரங்குன்னு தான சொல்ல முடியும். கிளின்னா சொல்ல முடியும்) 


தெருவுல மத்த குழந்தைங்க எல்லாம் ஒடிப் பிடிச்சு, லாக் & கீ, பாண்டி, நொண்டி விளையாடறதப் பாவமாப்.... பார்த்துட்டு இருப்போம். வீக் எண்ட்லெல்லாம் ஏண்டா வருதுன்னு இருக்கும். அப்பறம் என்னங்க சும்மா, பந்த் அமல்ல இருக்கிற மாதிரியே வீட்ல ஒரு ஃபீலக் கொடுத்திட்டு இருந்தா யாருக்குத் தான் போரடிக்காது..?

பக்கத்து வீட்டு மெஹராஜ் அக்கா, நூர் ஆண்டி, எதிர்த்த வீட்டு பெத்தா (பாட்டிய முஸ்லிம்ஸ் பெத்தான்னு தான் கூப்பிடுவாங்க) இப்படி யாராவது வந்து வெளிக் கதவ தட்டிக் கூப்பிட்டா செம ஜாலியாகிடுவோம். அந்த சைக்கிள் கேப்புல் நாங்க எஸ்கேப் ஆகிடுவோம்ல,...அதனால தான். ஹி..ஹி..

இப்படி ஒரு சனிக்கிழமை ம்தியம்  சாப்பாட ஃபுல் கட்டு கட்டிட்டு திண்ணைல ஒரு மாதிரி மந்தமா உட்கார்ந்துட்டு இருந்தேன். ஆமா, அதே பூட்டிய கதவு மட்டும் க்ரில் திண்ணைல தான். (எங்கம்மாவுக்கு தான் தெரியுமே கதவ திறந்துப் போட்டா நாய்க்குட்டி மாதிரி நான் ஒடிப் போயிடுவேன்னு.)

அப்போ எதிர்த்த வீட்டு அக்கா அம்மாவ பார்க்க வந்தாங்க, அவங்க வீடு அம்மாவுக்கு ரொம்ப பழக்கம். அவங்க ஒரு கூட்டு குடும்பமா இருந்தாங்க. பாட்டா செருப்புக் கடை, அப்பறம் “டிசைன்ஸ்ன்னு சின்னதா குழந்தைங்க ட்ரெஸ் விக்கிற ஸ்டோர் இரண்டு வச்சிருந்தாங்க.
அவங்க வீடல பெரிய வாப்பா, சின்ன வாப்பா, உம்மா(முத்தம் இல்லிங்க, உருதுல அம்மா), இன்னொரு உம்மா (சித்தி..சின்ன வாப்பா வைஃப்), அப்பறம் அவங்க மூணு பசங்க, 4 பொண்ணுங்க, பெத்தா ன்னு வீடே ஹிந்தி படம் கல்யாண வீடு மாதிரி இருக்கும்.

ஏன் ஹிந்தி படம் சொன்னேன் தெரியுமா,..அவங்க எப்பவும் தலைய முக்காடு போடிருப்பாங்க, உம்மா எல்லாம் வீட்ல பூப்போட்ட லுங்கி கட்டி, தாவணி மாதிரி போட்டு கழுத்து நிறையா கருக மணி தாலி போட்டிருப்பாங்க. வெளியப் போனா மட்டும் ஜிகு ஜிகுன்னு சேலை கட்டிருப்பாங்க. (அதுவும் இருட்டினாப்பறம் தான் அவங்க அந்த தெருவ விட்டு வருவாங்க). இப்படி தமிழ் மாதிரி பழக்கம், லுக் இல்லைன்னா எனக்கு அவங்க ஹிந்தி, அவ்வளவு தான்.

என்ன, இதுக்கே இப்படிங்கறீங்க, நான் அப்பல்லாம் அமெரிக்காவும், கேரளாவும் பக்கத்து பக்கத்து நாடுன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன் தெரியுமா...? அப்பறம், என்னங்க அமெரிக்கவுலருந்து வந்து என் கிளாஸ்ல சேர்ந்த பொண்ணும் இங்கிலிஷ் மட்டும் தான் பேசினா, கேரளாவுல இருந்து வந்த ரேஷ்மியும் இங்கிலிஷ் மட்டும் தான் பேசினா. தமிழ் தெரில, ஒன்லி இங்கலீஷ்ன்னா அவங்க ஃபாரின். எப்படி என் ஒண்ணாங் கிளாஸ் லாஜிக். அதே எம்.ஜி.ஆர் சிவாஜி கன்ஃபூஷன் கதை தான் இங்கையும். நல்ல வேளை சென்னைல அதுக்கப்பறமா படிச்சேன். இல்லைனா, நான் கன்ஃபுஷன்ஸ் ஆஃப் இண்டியாவா இருந்திருப்பேன் (இப்ப மட்டும் என்ன வாழுதுங்கறீங்களா..)

ஒ.கே. ஒவர் டு எதிர்த்த வீடு. அவங்க வீட்ல அண்ணன்மாரெல்லாம் ஒண்ணு கடைல வேலை பார்த்தாங்க இல்லைனா படிக்க ட்ரை பண்ணிட்டுருந்தாங்க. அக்காமரெல்லாம் ஒண்ணும் சரியா படிச்ச மாதிரி தெரியல. அவங்க தான் என் ஃப்ரெண்ட்ஸ்.

அன்னைக்கு வீட்டுக்கு வந்த அக்கா, தர்கா தெருல கல்யாணம் ஆகி அப்பறம் தலாக் ஆகி வீட்ல இருந்த அவங்க வீட்லயே ரொம்ப அழகான பெரிய வாப்பாவோட பெரிய பொண்ணு பெரிய மெஹராஜ் அக்கா. (ஸ்ஸ்..அப்பா மூச்சு வாங்குது) அவங்களுக்கு அப்பறம் படிப்பு ஏறாம வீட்ல தீப்பெட்டி ஒட்டிக்கிட்டிருந்த கனி அக்கா, அப்பறம் மெகரூன்னிஸா அக்கா, கடைசியா அவங்க வீட்டு கடைக்குட்டி என்னை விட 3 வயசு மூத்த, ஆனா ஃபெயில் ஆகி இரண்டாங்கிளாஸ் படிக்கிற (நான் ஃபர்ஸ்ட் ஸ்டார்ண்ட்) சின்னக் கனி.

என் ஸ்கூல்ல கொடுக்கிற புக்ஸ்செல்லாம் முதல்ல (இங்க்லீஷ் டெக்ஸ்ட் புக், நான் டிடைல் புக்) அவங்க வீட்டுக்கு தான் எடுத்துட்டு போய் ஏதோ ஷேக்ஸ்பியர் மெக்பெத்தா வாசிக்கிற மாதிரி வாசிச்சு காமிப்பேன். மாமி, பாய் மாமா, அக்காவெல்லாம் ரொம்ப ரசிப்பாங்க.

அப்படி அன்னைக்கு அக்கா வந்தப்போ தான் பின்னாலயே சின்னக் கனியும் வந்தாள். ரொம்பவும் அவசரத்துல இருந்தா. வந்து என்கிட்ட “ஒரு ருவாய் இருக்கான்னு ஒரு ருவாய் இருக்கான்னுஅவசரப்படுத்தினா. நான் அம்மாவக் கேட்கணும்னு சொன்னேன். 

இதெல்லாம் அம்மா பக்கத்துல தான் நடந்துகிட்டு இருந்தது. அம்மா சுவரசியமா ஏதோ பேசிட்டு இருந்தாங்க. நான் அம்மா கிட்ட ஒரு ரூவாய் கேட்ட்து காதுல விழவேயில்ல.


கனி வேற “ஐய்யோ சீக்கரம் வா, சீக்கரம் வான்னு டென்ஷன் பண்றா...என்ன விஷயமுன்னு புரியல. ஆனா அவளோட பதட்டமும் என்னைய தொத்திகிச்சு.

அம்மா அலமாரில கடைக்கு போய்ட்டு கொண்டு வருகிற சில்லரை வைக்கிற இடம் தெரியும். அங்க ஒரு ருவாய் போய் எடுத்துட்டு வந்து கொடுத்தேன். அவ இன்னும் ஒரு நாலணா இருந்தா எடுத்துட்டு வான்னு சொல்றா. நான் எப்படா வீட்லர்ந்து வெளியில போய் ஏதாவது விளையாடலாம்னு நினைச்சா இவ அத எடுத்துட்டு வா, இத எடுத்துட்டு வான்னு சொல்லிட்டுருக்காளேன்னு வேற எரிச்சலா வருது. சரி, சரின்னு நாலணாவும் எடுத்துட்டு ஒடி வந்தேன்.

வா, வா போலாம்னு என் கையப் பிடிச்சிட்டு (இழுத்துட்டு) போனா. நானும் வீட்ட விட்டுக் கிளம்பினா போதும்னு அடிச்சேன், பிடிச்சேன்னு அம்மாகிட்ட விளையாடப் போறேன்னு சொல்லியும் சொல்லாமலும் அவக் கூட அந்த மொட்ட வெயில வந்து தெருவுல நின்னா, பொட்டிக்கடைப்பக்கமா ஒரு கூட்டம் நிக்குது.

எல்லாம் அரை ட்ரவுசர் போட்ட எங்கத் தெரு, அப்பறம் பக்கத்து தெரு பசங்க.(அஞ்சு பேரு) எனக்கு இன்னமும் என்ன நடக்குதுனே புரியல. கனியேட கசின் பிரதர் ஒருத்தனும் இருந்தான். எல்லாருக்கும் அந்தப் பெட்டிக் கடைலர்ந்து 10 பைசாவுக்கு 10 ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பாங்களே அது வாங்கிக் கொடுத்தான். 


கையெல்லாம் பிசுப்பிசுக்க அத வாயில போட்டுட்டு கனிக்கிட்ட கேட்டேன் “என்ன விளையாடப் போறோம்ன்னு. அவ அந்தப் பெட்டிக்கடைப் பக்கமா ஒட்டிருந்த போஸ்டரக் காட்டி அத தான் பார்க்கப் போறோம்னு சொன்னா.

“யானைப் படம், “கலர்ப் படம் அதுவும் ரஜினிப் படம். எனக்கு சந்தோஷம் தாங்கல. கொஞ்சம் அம்மாவ நினைச்சா பயமா இருந்துச்சு ஆனா கூட இருந்த ஆறு பேரப் பார்த்தப்போ என் பயமெல்லாம் அமிர்தாஞ்சன் குணப்படித்திய தலவலி மாதிரி போயே போச்சு,..இட்ஸ் கான்,..போயிந்தே..

ஏழு பேரும் கையப் பிடிச்சிக்கிட்டு வரிசையா அந்த மொட்ட வெயிலுல குடியரசு தின விழா பரேடு மாதிரி ஜாலியா ஆரஞ்சு மிட்டாய சப்பிட்டேப் போனோம். தெருவுல யாரும் இல்ல. இல்லைனா, அப்பவே வீட்டுக்கு நீயூஸ் போய் எனக்கு ஸ்ஷெல் பரேடு நடந்திருக்கும். ஆனா, விதி வேற மாதிரி யோசிச்சுருந்தது. எப்படின்னா - இவ படம் பார்த்துட்டு வ்ரணும், வந்து வீட்ல நாலு மாத்து வாங்கணும், பின்னாளுலுல இவங்கம்மா இவள மொத்துனத பிளாக்ல இரண்டு மொக்க போஸ்ட் போடணும்னு.

சொப்பு சாமான், காய்கறி பலசரக்கு கடை, பேங்க் விளையாட்டு விளையாடறப்போ இருக்கிற ரொம்ப பெரியவங்க ஆன மாதிரியான த்ரில்ல விட இது செம த்ரில்லா இருந்துச்சு. நாங்களே லைன்ல நின்னு டிக்கெட் வாங்கி, எங்கம்மா அப்பா கூட்டிட்டு போற பின்னாடி சீட்டு இல்லாம, சில சமயம் அதுக்கு மேல போய் பால்கனில தனியா உட்கார்ந்து தீவுலர்ந்து பார்க்கற மாதிரி எல்லாம் இல்லாம. ஃப்ர்ஸ்ட் ரோ சீட்.

ஃபர்ஸ்ட் ரோ!!! என்னோட பல நாள் கனவு. எனக்கு எப்படி இருந்திருக்கும் பாருங்க. ஹய்யோ...மனசெல்லாம்  சந்தோஷமா இருந்த்து. நானும் கனியும் ஒரே சிரிப்பும் பேச்சுமா படம் பார்த்தோம் (அதுக்கப்பறம் நல்லா அழப் போறேன்னு தெரியாமா). 






“அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே பாட்டுக்கு எங்கூட வந்த பசங்களெல்லாம் டான்ஸ் வேற. செம ஜாலியா இருந்துச்சு. இன்டெர்வல்ல அந்த நாலணவுக்கு முறுக்கோ, கடல மிட்டாயோ ஏதோ வாங்கித் தின்னோம். படம் பாத்தப்பறம் கண்ணேல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு, காதெல்லாம் கூட ஒரு மாதிரி கொய்ய்ன்னு இருந்துச்சு. அந்த தியேட்டர்ல அக்கௌஸ்டிக் (Acoustics) சரியில்ல.

வீட்டுக்கு வந்தா,..அம்மா வாசலப் பாத்து நோக்கு வர்ம்ம் பிரக்கிடிஸ் பண்ணிட்டு இருந்தாங்க. நான் ஒண்ணும் தெரியாத பச்சப்பிள்ள மாதிரி முகத்த வச்சிக்கிட்டு உள்ள போனேன். அம்மாவும் என் பின்னாலயே வந்தாங்க. அம்மாவுக்கு நான் சினிமா போனது ஏற்கனவே தெரிஞ்சிருந்தது. பற் பல மிலிட்டரி விசாரணைக்குப் பின் என் வீர தீர செயலை மெச்சி வகைதொகை இல்லாமல் அடி, மொத்து, குட்டு என இன்னும் பல அம்மாமார்கள் மட்டுமே அறிந்த அரிய வகை மார்சியல ஆர்ட்ஸ்(Martial Arts) என் மேல் இயற்றப்பட்டது. அப்பப்பா,...மறக்கவே முடியாது நான் பார்த்த இந்த சினிமா அனுபவமும், அதுக்கு வாங்கின அடியும்.

அதுக்கப்பறம் நான் கனி கூட விளையாட அம்மாவால இரகசியத் தடை விதிக்கப்பட்டிருந்துச்சு. ஆனாலும் நான் அவளா இரகசியமாப் பார்த்து பார்த்துச் சிரிப்பேன். ஆனா அவளோ, ஏதோ நான் அவள சினிமாவுக்கு ஏமாத்திக் கூட்டிட்டுப் போன மாதிரி கோபிச்சிக்கிட்டா...ஆல் டைம்ஸ்.


அடுத்த பதிவுல என் ஆடுகாலி மாமா(அம்மா வீட்ல கடைக்குட்டி) வானர பட்டாளத்த “அனிமல்ஸ் ஃபிலிம் கூட்டிட்டு போய் "போங்கு" வாங்குன கதை...


Monday, June 25, 2012

ஒரு கோடிக் கனவுகள் !!! ;-)



ஒரு நாள் அலங்கார பூஷிதையாய்
ஒரு நாள் அலட்டாத பாவனையில்
சில நாள் மிதமான ஒப்பனையுடன்
இன்னொரு நாள் ஆர்ப்பாட்ட அழகியாய்

மென் பட்டு உடுத்தி,
கண்மை வரைந்து,
தொங்கட்டாணும்,
முத்துமணியாரமும்...

வெளீர் நிறச் சேலையும்
பாந்தினிப் பொட்டுப் பாவாடையுடன்
சில்லென்ற காதல் பூமிகா சுடி
பஃப் கை சட்டை, மிடி

முதல் புத்தகம், செல்ல நாய்
அப்பா, அம்மா, அவர் தந்த கனவு
தாத்தா, பாட்டி, அவள் வளர்த்த மாடு
காதல் கணவன், குழந்தை, அதன் பெயர்க் காரணம்

உலக அமைதி விரும்பியாய்
ஐ.ஏ.ஸ் கனவு உள்ளவளாய்
நீச்சல் வீராங்கனையாய்
டென்னிஸ் பந்து பொறுக்கிப் போடுபவளாய்

ரசிக்கும்படி ஒரு பாட்டு..
சின்னதாய் ஒரு  நடனம்..
நாணத்துடன் மெல்லியலாய்
நீமிர்ந்த நேர் பார்வையினளாய்

மெத்த படித்தவளாய்
துணுக்குப் பேச்சு வாயடியாய்
பகுத்தறிவுப் பறவையாய்
ஐயோ பாவமாய்...

இலகுவாக முன்றைரை லட்சம்
சிந்தித்து ஆறு லட்சம்
சிரமத்துடன் 12 லட்சம்
லக்கி பிரைஸ் 25 லட்சம்

தினம், தினம் கனவில்
நிதம், நிதம் நினைவில்
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
களைத்தேன் சூர்யாவுடன் ஆடி...!
நன்றி சூர்யா..! நன்றி விஜய் டிவி..!!!  J

Wednesday, June 6, 2012

ரெடி, லைட்ஸ், கேமரா, ஆக்க்ஷன் - 3

ஆக,...இப்படியாப்பட்ட, அப்படியாப்பட்ட புலி பாட்டிக் கூட பிளாக் & ஒயிட் இதயக்கனி வாத்தியார் படம் பார்க்க கொண்டாட்டமாய் ரெடியாகி, தெருவுல இறங்குனா,...

ஊரே அமைதியாய்,...இதமாய் வாடைக் காத்து வீசிக்கிட்டு,...சோன்பப்டி காரன் மணியடிச்சிட்டு போற சத்தமும்,...குடி தண்ணி குழாய் முன்னால கலர் கலராய் குடமெல்லாம் அழகாய் அடுக்கி,..புழுதியெல்லாம் அடங்கி,...ஒவ்வொரு வீட்டு முன்னும் அன்னைக்கு சாயங்காலம் போட்ட கோலம் அழிஞ்சும் அழியாமலும்...

கொஞ்சமாய் மெயின் ரோட்ட ஓட்டிப் போகிறப்போ ரோட்டோரமாய் பெட்ரோமேக்ஸ் லைட் “ஸ்ஸ்ஸ் சத்தத்துல கைலி கட்டின அண்ணன்மாரெல்லாம் மசாலா மணக்க அவசர அவசரமாய்ப் பரோட்டோ போட்டுகிட்டு,...எங்கையோ ஏதோ கட்சிக் கூட்டத்துல கேட்கற தூரத்து குழாய் ஸ்பீக்கர் சத்தத்தோட,..

நடை சாத்தின கோயில், கோயில் வாசல்ல கடைய மூடிக்கிட்டு இருக்கிற ரோட்டோர விளையாட்டுச் சாமான் கடைக்காரர், கொஞ்சம் குழப்பமான பூ வாசனை வீசும் பூக்கடை, வீட்டுக்குப் போய்ட்டு இருக்க பலூன் காரர்னு,..ஊரே வித்தியாசமாவும், புதுசாவும் ....ஹய்யோ..!!! பாட்டிக் கூடப் படத்துக்கு போறதுக்கு அது செம பில்டப்பக் கொடுக்கும். இன்னும் அத நினைச்சா எவ்வளவு சுகமாய் இருக்குத் தெரியுமா...

எத்தனை அழுது சாதித்தாலும் அம்மா வாங்கித் தராத பஞ்சு பஞ்சான சோன்பப்டி தினசரி தாள்ல சுருட்டியது ஒரு கையிலையும், பாட்டி விரல இன்னொரு கையிலயும் பிடிச்சிக்கிட்டு,..குதியாட்டாம் போட்டுக்கிட்டு, கேள்வி மேல கேள்வி கேட்டிக்கிட்டு போவேன்.

அதுவும் இந்த சோன்பப்டிக் காரர் எல்லாம் நல்லவங்களாவே இருந்தாங்க. ஒரு ரூபாய்க்கு சோன்பப்டி வாங்குனா.., பாட்டி “சின்னப் பிள்ள, கூடக் கொஞ்சூண்டு சோன்பப்டி தாப்ப..ன்னு சொன்னா இன்னும் கொஞ்சம் வஞ்சனையே இல்லாம தருவாங்க.

பாட்டி ரொம்ப ரொம்ப பழைய பேருள்ள, ரொம்ப பழைய கட்டிடமாயிருக்கிற சினிமா தியேட்டருக்குத் தான் கூட்டிடு போவாங்க நாரயணசாமி, நியூ முத்து டாக்கீஸ் இப்படி. 

அங்கெல்லாம் ஒரு மாதிரி வெத்தல, பீடி வாசனை கூட அடிக்கும். மழை பெய்ஞ்சா ரோட்ல நடக்க ரவுசு பண்ற நான், அந்த வாசனைப் பற்றியெல்லாம் கவலைப்படாம ஜாலியா பாட்டிக்கிட்ட இன்டர்வெல்ல என்ன வாங்கித் தரச் சொல்லாம்னு சீரியசா “திங்க் பண்ணிட்டு இருப்பேன். ஹி..ஹி..என் கவல எனக்கு.

பாட்டி டிக்கெட் வாங்குற இடத்தில பாட்டி மாதிரியே நடை உடை பாவனையுடன் கூடிய ஒரு லேடிய ஃபிரெண்டு பிடிச்சுப்பாங்க.

பாட்டி பெஞ்சு இல்லைனா எப்பவாது தரை டிக்கெட் வாங்குவாங்க. கால நீட்டி உட்கார்ந்துகலாமில்ல. ஒரு தடவ தரை டிக்கெட் போனதிலர்ந்து எனக்கு பெஞ்சு பிடிக்காது, எட்டி எட்டிப் பார்க்கனும், போரடிச்சா விளையாட முடியாது. தரை மாதிரி நிறையா இடம் இருக்காது. சில தியேட்டர்ல மண்ணு போட்டுருப்பாங்க. அதுல கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடலாம். இப்படி நெறையா அட்வான்டேஜ் ( “ஹலோ, நான் தரை லொக்கலுன்னு நான் எப்பவாது சொன்னா உண்மையத் தான் சொல்றேன்னு நம்புங்க)

 

அப்பறம் பாட்டி ரொம்ப உயரம் அதனால பாட்டி கால நீட்டி உட்கார்ந்தா நான் சைக்கிள போற மாதிரி இரண்டு பக்கமும் கால போட்டு அவங்க பெருவிரல பிடிச்சுட்டு உட்கார்ந்துகிட்டு சண்டக் காட்சி வரப்பல்லாம் பாட்டியோட  ஒரு பாதத்த நம்பியாராவும், இன்னொரு பாதத்த எம்.ஜி.ஆராகவும் நினைச்சி முட்டி முட்டி மோதி சண்ட போடுவேன்.

 நாகேஷ் வர்றப்பல்லாம், ஏதோ எல்லாம் புரிஞ்ச மாதிரி சிரிப்பேன். சோக சீன் வந்தா பாட்டி நீட்டின கால்ல மல்லாக்கப் படுத்துக்கிட்டு சினிமா தியேட்டர் விட்டத்தப் பார்த்துக் கிட்டு எப்ப இன்டெர்வல் வரும்ன்னு யோசனை பண்ணிட்டு இருப்பேன்.

இன்டெர்வல்ல அம்மா, அப்பா வாங்கித் தராத கடல மிட்டாய், முறுக்கு, அப்பறம் அந்த அரஞ்சு கலர் பஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுட்டு...அம்மா கூட  கலர் படமும், பாட்டிக் கூட பிளாக் & ஒயிட் படமும் பார்த்துட்டு உலகிலயே அதிகமான பணக்காரன விடவும், உலக அழகிய விடவும், முக்தியடைஞ்ச ஜடாமுடி சாமியார விடவும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேங்க...

ஆனாலும் வயசு ஆக ஆகத் தாங்க பிரச்சனயே வருது...வயசோட சேர்ந்து ஆசையும் வளர்துல... ஆமாங்க அடுத்த பதிவுல நான் என் ஃப்ரெண்ட்ஸோட பாத்த படத்த பத்தி...

ஓ,....அதுல என்ன பெரிய விஷயம்ங்கறீங்களா. அப்போ நான் ஃப்ர்ஸ்ட் ஸ்டர்ண்ட்,...ஒண்ணாங் கிளாஸ் தான் படிச்சிட்டு இருந்தேன்.

                         -   அடுத்த பதிவுல எனக்கு டின்னு கட்டின படம் பார்க்கலாம்....அவ்வ்வ்...

Sunday, May 20, 2012

கெளரதையும், அதைக் காதல் செய்தவளும்...!


ஆத்தாளுக்கு...
தென்னமரக்குடியெண்ணை!

அய்யனுக்கு...
டீக்கடை பாக்கிப்பணம்!

அக்காளுக்கு...
மச்சான் வாங்கி தராத சிவப்பு வளவி!


அவ பெத்த மகராசனுக்கு...
பிசுபிசுக்கும் பப்பர மிட்டாய்!

பீடி சுத்திய சம்பளக் காசில்,
கச்சிதமாய் கணக்குப் போட்டவள்...

ஒரு கிலோ சீனி மிட்டாயும், சேவும் வாங்க
ஒடிக் கொண்டிருந்தாள்...

பக்கத்து வீட்டுச் செல்வி வழியில்
“ஏ புள்ள டவுனலேர்ந்து, உன் மாமன் வந்துருக்குன்னுச் சொல்லக் கேட்டு

ஐ.டி.ஐ படித்து விட்டு, ஐ.ஐ.டி படித்தது போல
இவளைக் கட்டிக்க மறுத்த அந்த கெளரதை மாமனுக்கு...!!!

Tuesday, May 15, 2012

ரெடி, லைட்ஸ், கேமரா, ஆக்க்ஷன் - 2


பாட்டி வீட்டுக்கு வரும் போதே ரோட்ல போஸ்டரேல்லாம் பார்த்து என்ன படம் போலாம்னு ஒரு மாதிரி முடிவு பண்ணிட்டுத் தான் வந்துருப்பாங்க.

பாட்டிக்கு அழுவாச்சி படம் பிடிக்காது போல, 5 ருபாய் வாங்கிட்டு 10 ரூபாய்க்கு நடிக்கிற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படமெல்லாம் சாய்சஸ்ல விட்டுட்டு அவங்க டிக் பண்றது வேற யாரு நம்ம தங்கத் தலைவர் பொன்மனச் செம்மல் வாத்தியார் படம் தான்.

எனக்கு எம்.ஜி.ஆர், சிவாஜின்னு எல்லாம் சொல்லத் தெரியாது மாத்தி மாத்தி தப்புத் தப்பா சொல்லுவேன். என்னையப் பொறுத்த வரைக்கும் அது கலர் படமில்ல அவ்வளவு தான்.

அம்மா சின்ன வயசுல வளர்ரப்போ, அவங்க அம்மா( அம்மா பாட்டி) ரொம்பா ஸ்டிரிக்ட்டாம். அம்மா சினிமாவே பார்த்தில்லையாம். அதனால, கல்யாணத்துக்கப்பறம் அம்மா பார்க்காத படமெல்லாம் பார்த்து “காட்ச் சப் (Catch Up) பண்ணுவாங்க. அப்படி பழைய சினிமாப்படம் போகுபோதெல்லாம் என்னையக் கூப்பிட்டா “புலி பசிச்சாலும் புல்லத் திங்காது மாதிரி தெனாவெட்டா முடியாதுன்னு சொல்லிருவேன். 

அவங்களும் விட்டது தொல்லைன்னு அம்மா பாட்டி வீட்ல விட்டுட்டு போய்டுவாங்க. நானும் பாட்டி மதியம் தூங்கினப்பறம் ஜாலியா தெருப் பசங்க பம்பரம் விடறத,, கோலி விளையாடுறத பார்க்கப் போய்டுவேன். (வேக்கேஷன் டைம்ல பாட்டி வீட்ல தான இருப்போம்).

அப்படி வேக்கேஷன் இல்லாத சில சமயத்துல என்ன யார் வீட்லயும் விடமுடியாத சூழ்நிலைல தான், நான் அழ, அழ சில நேரம்  அடிச்செல்லாம் பழையப் படத்துக்குக் கூட்டிடுப் போய்ருக்காங்க. ரிமம்பர்...புலி பசிச்சாலும் புல்லத் திங்காது.

ஆனா அப்படியாப்பட்ட இந்த புலிய(நான் தாங்க...ஹி ஹி) ஒரு தடவ வார்த்தை விளையாட்டு விளையாடி “புல்லா ஏமாத்திக் கூட்டிட்டு போனாங்க. எப்படியா...

நான் தான் கேள்வியின் நாயகியாட்ச்சே. சின்ன வயசுல சில கேள்விகள் ஸ்டண்டர்டா வச்சிருப்பேன்.
உ.தா. யாராவது விருந்தாளிங்க வீட்டுக்கு தங்கற மாதிரி வந்த. நல்லா அவங்க கொண்டு வந்த ஆப்பிள், ஜூஸ்பெர்ரி, பிஸ்கெட்டெல்லாம் முன்ன பின்ன பார்க்காத மாதிரி, சாப்பிடாத மாதிரி, மொக்கு மொக்குன்னு மொக்கிட்டு அவங்க கிட்ட ரொம்ப சந்தோஷமா “நீங்க எப்போ ஊருக்கு போறீங்க்ன்னு கேட்பேன்.

அவங்க டெரர் ஆகி எங்க அம்மாவ நல்லா வளர்த்து வைச்சுருக்கீங்க பிள்ளையன்னு பார்ப்பாங்க. நான் ஏன் அப்படி கேட்பன்னா, வந்தவங்க நிறையா நாள் வீட்ல இருக்கனும்னு எனக்கு ஆசை. ஒரு வேளை சீக்கிரமாப் போறாங்கன்னா. “போகாதீங்க போகாதீங்க, ப்ளீஸ் ப்ளீஸ்ன்னு கெஞ்சுவேன். இரண்டு நாள் இருக்காங்கன்னா அதுக்கு ஏற்ற மாதிரி என் ஈவ்னிங் விளையாட்டுப் பிளான் போட்டு வச்சுப்பேன். 
இத எங்கம்மா விளக்கு விளக்குன்னு சபீனா போட்டு விருந்தாளிங்கக் கிட்ட விளக்கறதுக்குள்ள ஒரு வழியாகிருவாங்க.

அதே மாதிரி சினிமாவுக்கு வான்னு கூப்பிட்டா நான் கேட்கற முதல் கேள்வி “கலர் படமா ? பிளாக் & ஒய்ட்டா?” அப்படி ஒரு தடவக் கேட்டக் கேள்விக்கு சுட்ட பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமான்னு முருக பெருமான்னு ரேஞ்சுக்கு எங்கம்மா ““பச்சை விளக்கு””ன்னு சொல்லி என்னைய கன்ஃபுயூஸ் ஆக்கிக் கூப்பிட்டுப் போய்ட்டாங்க. 

ஆனா, எனக்கோ ஒரே டவுட்டு அம்மாவோட “எக்ஸ்பிரஷன்ல ஏதோ என்னைய ஏமாத்தின மாதிரி ஒரு “ஃபீல் இருந்தது. போற வழியேல்லாம் நான் போஸ்டரப் பார்த்தாவதுக் கண்டுபிடிக்கலாம்னு கண்ண மேயவிட்டுட்டேப் போனா... பிளாக் & ஓயிட் படப்போஸ்டர படுபாவிங்க சிவப்பு, மஞ்சள், பச்சை கலரக் கொடுத்து இன்னும் கன்ஃபுஸ் பண்ணி வச்சிருந்தாங்க.

பாதி வழில போஸ்டர்ல எம்.ஜி.ஆர் இருக்காரு (நமக்கு தான் சிவாஜி, எம்.ஜி.ஆர் விவரம் தெரியாதே) நான் வரலன்னு “ஸ்ட்ரைக் பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கு இன்னொரு படப்போஸ்டரக் காட்டி அம்மா சமாதனம் பண்ணங்க. 

அது, இதுக்கு மேல கன்ஃபுஸன். ஆமாங்க, நடிகர் திலகம் சும்மா இல்லாம “வாழ்க்கை அது இதுன்னு அந்தக் கால கனவுக்கன்னிகள் அம்பிகா ராதாக் கூடெல்லாம் நடிச்சிட்டுருந்த டைம். அதுல ஒரு போஸ்டரத் தான் அம்மா காண்பிச்சாங்க. 

சரி என்ன தான் ஆவுதுன்னு போய் தியேட்டர்ல உட்கார்ந்தா,... நல்லா பிளாக் & ஓய்ட்ல, செவாலியர் சிவாஜி இஞ்சின்ல கரிய அள்ளி அள்ளிப் போட்டுக்கிட்டு பாட்டுப் பாடிக்கிட்டு வராரு.


படமும்  அழுகை,..நானும் இங்க செம அழுகை.

நம்பிக்கைத் துரோகத்தோட வலி இருக்கே...அப்பப்பப்பா...நெஞ்சு அடைச்சு, விம்மி, விம்மி, கண்ல தண்ணீர் கோர்த்து, விக்கி விக்கி இப்படி ஏமாந்து போய்ட்டோமேன்னு அழுதா. அதக் கண்டும் காணமலும் இந்த அம்மாமார்களேல்லாம் நடிகையர் திலகம் சாவித்திரியே நோட்ஸ் எடுத்துக்கற ரேஞ்சுக்கு ஒரு ஆக்டிங் கொடுப்பாங்களே.....அடடடடா,...தாங்காது...(நம்ம சின்ன மனசும் தான்)

ஆக,...இப்படியாப்பட்ட, அப்படியாப்பட்ட புலி பாட்டிக் கூட பிளாக் & ஒயிட் இதயக்கனி வாத்தியார் படம் பார்க்க ரெடியாகிட்டு இருக்கும்...

    -       அடுத்த பதிவுல பாட்டிக் கூட படம் பார்க்கலாம்....ம்ம் சரியா..

Thursday, May 10, 2012

ரெடி, லைட்ஸ், கேமரா, ஆக்க்ஷன் - 1


சினிமாவும் நானும் பகுதி எழுதனும்னு நினைச்சவுடனயே எனக்கு கெக்கபிக்கேன்னு சிரிப்பு தான் வந்துச்சு. அப்பறம் நான் பெரிய பாலசந்தர், பாலுமகேந்திரா என்னுடைய சினிமா அனுபவங்கள தொகுத்து வழங்கறதுக்கு... ஆனாலும் சொல்லுவேன் J உங்களுக்கு பிடிக்குமென்ற நம்பிக்கையில்...( நம்பிக்கைய விட நப்பாசை தான் சரியான வார்த்தை J)

சரி எல்லாரும் மேல பாருங்க...ஸ்ஸொய்ங்... ஸ்ஸொய்ங்...(ஃப்ளேஷ்பேக் அது இல்லாமா சினிமாவா..J)... 

இல்லைனா இந்த படத்தப் பாருங்க (படத்தப் பார்த்து தலைய சுத்தி வயத்தப் புரட்டினா நான் பொறுப்பில்லப்பா)

அப்போ எனக்கு ரொம்ப சின்ன வயசு...சும்மா நாலுன்னு வச்சிக்கோங்களேன். கிராமத்தில இருந்து எங்க பாட்டி அதாவது என் அப்பாவை பெற்ற அம்மா வருவாங்க. “அப்பத்தான்னு தான் கூப்பிடனும் நான் ரொம்ப ஒல்ட் ஃபேஷனாருக்குன்னு பாட்டி தான் கூப்பிடுவேன். 

இப்ப நடிகர் சூர்யா விஜய் டிவில அவங்க பாட்டிய “ஆத்தான்னு கூப்பிடுவேன்னு ஸ்டைலா சொல்றப்ப தான் தோணுது மிஸ் பண்ணிட்டோமோன்னு. 

அந்த பாட்டி வீட்டுக்கு வந்தா எனக்கு செம ஜாலி பல காரணங்களுக்காக

1.       பாட்டி ஒடம்பெல்லாம் ஒரே டாட்டூஸ். எனக்கு அத ஆராய்ச்சி பண்ணிரது ஒரு பெரிய பொழுது போக்கு. அவங்க காது வளர்த்து பெரிய தண்டட்டி போட்டு, காதெல்லாம் பல இடங்கள குத்தி “கொப்பு, “முறுகுன்னு அழகழகான பேருடைய பல நகைகள் காதுல போட்டிடுப்பாங்க. நல்ல ஒல்லியா, உயரமா, இடுப்புக்கு கீழே விழற தல முடிய கோடாலிக் கொண்டப் போட்டுக்கிட்டு சரியா “அத்லெடிக் பில்ட்டா இருப்பாங்க...சங்கத் தமிழ் பெண்கள் முறத்தால புலிய விரட்டினது உண்மையின்னு அவங்களப் பார்த்தா 100% நம்பலாம்.



கிட்டத்தட்ட அவங்க எனக்கு ம்யூசியம் மாதிரி. அவங்கள சும்மா வளைச்சு, வளைச்சு தொட்டு தொட்டுப் பார்த்து, கேள்வி மேல கேள்வி கேட்டு ஆராய்ச்சி பண்ணுவேன்.



       2. அடுத்த காரணம் வித்தியாசமான கிராமத்துக் கதை சொல்லுவாங்க. எந்த குழந்தைங்க புத்தகத்திலயும் வரதா,..வர முடியாத சமூக நீதிக் கதைகள். உ.தா. ராசாவுக்கு துரோகம் பண்ணின ராணி. அதக் கண்டுபிடிச்ச மந்திரி...இப்படி J

3   3. பேத்தின்னு பார்க்கமா என்னை ரொம்ப வம்பிழுப்பாங்க. சினிமா தமிழ்ல சொல்லனும்னா கலாய்ப்பாங்க..
  4.ஆனா இதெல்லாம் விட அவங்க வரவ நான் ரொம்ப எதிர்பார்த்துக் கிடக்கிரது எதுக்கு தெரியுமா...சினிமா...:-) (அப்பாடா,..டாப்பிக்கிக்கு வந்துட்டேனா..J )

   பாட்டிக்கு நான் தான் சினிமா கம்பேனியன். அதுவும் செக்ண்ட் ஷோ தான் போவோம். அதுக்காகவே,..தூங்காம முழிச்சிருப்பேன். பாட்டி சாப்பிட்டு முடிச்சு, வெத்தலப் போட்டு அப்பாக் கிட்ட எல்லாக் கதையும் பேசி ஒரு மாதிரி ட்ன் ஃபோர் த டே (Done For The Day) ஆகும் போது பாட்டி சினிமா போக ரெடியாவாங்க. அவங்க பின்னாலயே திரிவேன். எங்க விட்டுட்டுக்கிட்டுட்டுப் போய்ட்டாங்கன்னா. அம்மாவும் எப்படின்னு தெரில என்னைய ஓண்ணும் சொல்லாம அவங்க கூட அனுப்பி வைச்சிருவாங்க.

   ஆனா இதுல ஒரே ஒரு பிராப்பளம் பாட்டி லைக்ஸ் ஒன்லி பிளாக் & ஓயிட் மூவீஸ். நான் கலர் படம் மட்டும் தான் பார்ப்பேன். 

   “நாம தான் ஃபிரியாக் கொடுத்த ஃபினாயிலக் கூடக் குடிப்போம்லா J... இப்படி சொல்வேன்னு நினைக்காதீங்க. 
   
 பாட்டி கூட சினிமா போற அனுபவம் ரொம்பவும் அலாதியானது. அதுக்காகத்தான் கண் முழிச்சு காத்திருந்து போவேன்....

   ஏன் அலாதியானதுன்னு அடுத்த பதிவுல சொல்றேன்...

Thursday, April 26, 2012

ஒரு கண்ணாடி, ஒரு கட்டில்...


என் அறையில்...
கண்ணாடியும், கட்டிலும்
உன்னைப் பற்றி புரணி பேசிற்று...

“எனக்கு கையிருந்தால்
 கண்களை மூடிக் கொள்வேன்
இவன் கொட்டம் தாங்க வில்லை

“ம்ம்க்கும்......
 எனக்கு கால் இருந்து என்ன பயன்?
 ஓட முடியவில்லையே...!!!” :-(

அமர்க்களம் செய்கிறாயேடா...!!!

Wednesday, March 21, 2012

சிறியதாகவும்,..பெரியதாகவும்..



ஹிட்லரின் அட்டுழியத்தையும்...
ஹிரோஷிமா, நாகாசாகி அழிவையும்...
இரட்டைக் கோபுர நாச வேலையின் போதும்
அவன்..
வேதனிப்பாதாய்ச் சொல்லிருப்பான்!

நாமும் கூட அவனுடன்
உச்சுக் கொட்டி
திட்டித் தீர்த்திருப்போம்...
முள்ளிவாய்க்காலில் அவன் முகத்திரை கிழியும் வரை!

முகபாவம், உடை, நடை, தோரணை என
நம்மைப் போலவே
நம்மிலும் பல
ராஜபக்க்ஷேக்கள்....
சிறியதாகவும்,..பெரியதாகவும்...

Monday, March 19, 2012

கல்லடி

அந்த அரை சாமத்து வேளையில் அவனுக்காய் காத்திருந்தாள். கண்களில் மையை இன்னும் ஒரு முறை அழுந்த இட்டு விட்டு, லெபானிய வணிகன் ஒருவன் விற்காமல் போய்..., ஊர் திரும்பி போகிற போக்கில் இவள் புனைந்திருந்த பானைகளுக்கு மாற்றாய்த் தந்த வாசனை திரவியம் பூசிய அவள் நீண்ட அடர்ந்த முடிக்கற்றைகளை நீவியவாறு யோசனையோடு காத்திருந்தாள்.

நீளவாக்கான மாசறு முகம், செதுக்கியது போன்று மூக்கு, கரு நீல விழிகள். அவை அயர்வுடன் சொருகும் போதெல்லாம் மயக்கத்தில் கிறங்குகிறாள் போலும் என எண்ணத் தோன்றிற்று. நல்ல கோதுமை நிறத்தில் சராசரி பெண்ணின் உயரத்தைக்காட்டிலும் கொஞ்சம் உயரமாய், அழகி தான் அவள்.

எப்போதும் போல அவள் எண்ணங்கள் தறிக்கெட்டு பின்னோக்கிப் போயிற்று. பதினேழு பேரில் ஒருத்தியாய் பிறந்தது முதல், அம்மாவின் முத்தம், மிக இளப்பிராயத்திலயே செத்துப் போன தனக்கு நேர் மூத்த அக்காவுடன் விளையாடிய சிறு வயது ஞாபகங்கள், பின் அந்தப் பாலை பூமியில் தன் பதின்மூன்று வயதில் ஒரு 45 வயது வாலிபற்கு நான்காவது மனைவியாய் வாய்த்தது வரை மனம் அலைந்து திரிந்து ஆர்ப்பரித்தது.
ஆட்டு மந்தைகளோடு ஆடாய்த்தான் போயிருந்தாள், கனவுகள் அவளைச் சிறையில் எடுக்கும் வரை. மனதிலும், உடலிலும் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அவள் மண வாழ்க்கை மருந்தாய் அமையவில்லை. இதோ,...இப்படி பேரிட்சை பழக்காரனின்,..பேரிச்சைக்கு இஷ்டப்பட்டு ஆட்பட்டுக் கொண்டாள்.

பரத்தையாம்,...ஊரார் அவளுக்கு வைத்த பெயர் ஒன்றும் அவளுக்கு வலிப்பாதாய் இல்லை. அவனுடன் கழிந்த பொழுதுகள் அவள் தாய், தமக்கையின் ஞாபகங்களை மீட்டெடுத்தன. இப்படி இருப்பதில் அவள் தனக்கு சந்தோஷம் என்றே எண்ணிக் கொண்டாள். யோசிக்கக் கூடாத விஷயங்களை யோசிக்கவே... கூடாதென்று முடிவு கொண்டிருந்தாள். அவளுக்கு அவள் நியாயம் அவ்வளவு தான்.

சே,...என்னாவாயிற்று,..இத்தனை நேரம். வரமாட்டானோ என்னவோ என்றேண்ணிய அடுத்த நொடியில் வாசலில் சத்தம்.

வந்து விட்டிருந்தான். மதுவின் வாடை சற்றுத் தூக்கலாய் இருந்தது குடித்து கும்மாளமிட்டு விட்டு வந்திருப்பான் போலும். மதுவின் வாடை அவளையும் வாட்டிற்று.ம்ம்ம்...இன்று கதைகள் பேச நேரமில்லை. குடித்தவனிடம் என்ன சொல்ல அவன் என்ன கேட்க.
வழக்கமான அடுத்த விஷயங்கள் மளமளவென அரங்கேறிற்று, சற்று அயர்ந்து உறங்க எத்தனிக்கையில் “தட தட” வென கதவு அதிர்ந்தது. என்ன நடக்கிறது என அறிவதற்குள் வாட்ட சாட்டமாய் மூவர் கதவை பெயர்த்துக் கொண்டு உள்ளே வந்திருந்தனர், அதிரடியாய் அவளை அரைகுறை ஆடையுடன், தலைவிரி கோலமாய், அவளைத் தொடுவது பாவம் போன்று, அவள் தலை மயிற்றைப் பற்றி தெருவிற்கு இழுத்து வந்தனர். கூக்குரலிட்டவாறு அவள் இன்னதென்று சொல்லி அழைக்க முடியாத உறவினனைத் திரும்பித்திரும்பிப் பார்த்தனள்.

அவன் பயந்து போய் விட்டிடுந்தான் கைகளும் கால்களும் நடுங்க அங்கியைப் பற்றியபடி எங்கோ பார்த்த படி நின்று கொண்டிருந்தான், அவள் முகத்தை வருடி, நெற்றி முடிக்கற்றைகளை விளையாடும் அந்த கரங்களை இறுக்கமாய்க் கட்டியபடி.
வெட்கமும், கழிவிரக்கமும், வேதனையும் பிடுங்கித் திங்க வீதியில், முக்காட்டுத் துணியோடு இன்னும் பலவற்றைத் தொலைத்தவளாய், விதியை நொந்த வாறு கண்ணீரும் கம்பலையுமாய் நகரின் நடுவில் விளங்கிய முக்கிய பொட்டல் வெளியில் எதன் பொருட்டோ கூடிய கூட்டத்திற்கு நடுவே அவள் இழுத்து வரப்பட, சரியாய் விடிந்திருந்தது
தலை நிமிர்ந்துப் பார்க்க வெட்கித்து,..அழுகையினால் விக்கித்து அவள் அந்த பெரும் புழுதியில் வீழ்ந்துக் கிடந்தாள் கந்தலாய். சல சல வென கூட்டத்தின் எள்ளல் அவளை மெல்லச் சாகடித்துக் கொண்டிருந்தது. நடப்பது என்னவென்று அறியாமல் அவள் அசைவுற்றுக் கிடந்தாள்.

பரிசுத்த வேதாகமத்தை படித்துக் கரைத்துக் குடித்திருந்த வேதபாரகரும், பரிசேயரும், அங்கே நடு நாயகமாய் இருந்தவரை நோக்கி உரத்த குரலில் உரைத்தனர் “போதகரே! இதோ இந்த பெண்ணானவள் ஒரு பரத்தை. இன்று அதிகாலை கையும் களவுமாக பிடிக்கப்பட்டவள். இப்படியானவர்களை கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, இதற்கு நீர் சொல்லுகிறீர்?”
விதியை அறியும் பொருட்டு அவள் மெல்ல கண்ணுயர்த்திப் பார்த்தாள். ஆங்கே, அவள் கண்ட காட்சி அவளை ஒரு கணம் தன்னிலை மறந்து சிந்தனையில் ஆழச் செய்தது.





யார் இவர்.?...
தன்னைச் சுற்றி நடக்கும் இத்தனை களபரேமும் பாதிக்காதவராய்,..
அமைதியின் உருவாய்,..கனிவைத் திருமுகமாய்,..கருணையைக் கண்களாய்க் கொண்டவராய்,..இவர் யார்..?

இரும்பான இதயமும், இறுமார்ந்த இதயமும் இவர் பிரசன்னத்தில் இளகக் காத்திருக்கும்...ஈன்றெடுத்த தாயைப் போலவும், பேணி வளர்க்கும் தந்தைப் போலவும்,..ஒரு சேரத் தோன்ற வீற்றிருக்கும் இவர் யார்.?

அங்கே அவள் காண்பது ஞானத்தின் ஒளியா,..இல்லை அதிகாலையில் உதித்த இன்னொரு ஞாயிற்றின் ஒளியா?...யார் இவர்?

மனிதன் போலவும் அம்மனிதனைப் படைத்த தேவன் போலவும் விளங்கும் யார் இவர்?...
அவள் அறிந்த மொழியின் எந்த வார்த்தைகளாலும் எப்படி முயன்றாலும் விவரிக்க இயலாத இயல்பினனைக் கண்டாள்.

ஒரு கணம் அவள் தான் தேர்ந்தெடுத்த வாழ்வியலை நினைத்து தன்னை அற்பமாகவும் அவர் அண்டையில் அத்தனை நெருக்கத்தில் அவரைக் காணக்கிடைத்ததை பாக்கியமாகவும் கருதினாள்

புரிந்தது புரியாமலும், அறிந்து அறியாமலும், தெரிந்தும் தெரியாத நிலை அவளுக்கு...
அந்த குழப்பதிலும் தெளிந்த மனநிலை. கீழே கிடந்தவள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்துக் கொண்டாள்,..அவள் வாழ்வின் முக்கிய தருணமிது என்று ஏதோ சொல்லிற்று.
வேதபாரகரும், பரிசேயரும், திரும்பத் திரும்ப அவர்கள் சொன்னதைச் சொன்னபடி இருந்தார்கள் பொறுமையற்றவர்களாய்..

அவரோ மிக நிதானமாக புழுதியில் எழுதியபடி இருந்தார்.
வேதபாரகரும், பரிசேயரும் இன்னமும் அழுந்தச் சொல்லக் கூட்டமும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டது

புழுதியில் எழுதுவதை ஒரு கணம் நிறுத்தி அவர்களை நோக்கிப் பகர்ன்றார் “உங்களில் யார் பாவம் செய்யாதவரோ அவர் இவள் மேல் முதலாவது கல்லேறியக்கடவன்” என்று சொல்லி மறுபடியும் குனிந்து தரையில் எழுதினார்.

அதைக் கேட்ட கூட்டம் ஒரு கணம் ஸ்தம்பித்த மாத்திரத்தில் வேதபாரகரும், பரிசேயரும் அவர் சார்ந்தவர்களும் இனி அவர்கள் தந்திரம் வேலைக்காகாது என்று அவ்விடத்தை விட்டு நீங்கிச் சென்றனர்.

நசரேத்து பெருமகனார் சோதித்தக் கேள்வி கூட்டத்தின் மனசாட்சியை வருத்த முதலவதாக பெரியோரும் பின்னர் சிறியவர்களும் சென்றனர்.

பரம்பொருள் தந்த அரும்பொருளாம் இயேசு பிரானும், அலைகிழிக்கப்பட்ட அந்த பாவப்பட்டப் பெண்ணும் அந்த வெளியில் தனித்து இருந்தனர். இயேசு பிரான் நிமிர்ந்து அந்தப் பெண்ணைத் தவிர வேறொருவரையுங் காணாமல் “பெண்ணே! உன் மேல் குற்றஞ்சாட்டியவர்கள் எங்கே? ஒருவன் கூட உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா?” என்றார்.

நடக்கும் ஒவ்வொரு காரியமும் கனவுலச் சஞ்சாரமா இல்லை தன் அறிவுக்குக்கெட்டாத மெய்யா என்ற நிலைக்கொண்டவளாய்க் கிடந்தவள் தயங்கியபடி மெல்ல வாய் திறந்து உரைத்தாள் “இல்லை, ஆண்டவரே”.

இயேசு அவளை நோக்கி “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் திர்க்கிறதில்லை. நீ போ. இனி பாவஞ் செய்யாதே” என்றார்.

அவ்வளவு தானா,...? என் பாவங்கள் மன்னிக்கப்பட்டதா...?

எனக்கு இன்னொருப் பிறப்பா,..? இனி யாரும் என்னை எள்ளி நகையாடுவதில்லையா,..?

நான் உமது சபையில் ஒத்துக் கொள்ளப்பட்டேனா,..? என் வாழ்வை நேர் செய்ய இன்னொரு சந்தர்ப்பமா,..?

எனக்காவா...? எனக்காவா,.. நீர் பரிந்து பேசினீர்,..?

இதோ இந்தக் கூட்டத்தில் என்னை ஆண்டு அனுபவத்தின் இருந்திருப்பானே...அவன் வர வில்லையே...?

ஒரு கணத்தில் சாவின் விளிம்பில் இருந்து காத்து, புது வாழ்வு தந்தாரே,..யார் இவர்,..?

இவர் மன்னித்த மாத்திரம் என்னுள்ளம் உடைந்து கதறுகிறதே...

நெஞ்சு வெடிக்க, உதடு துடிக்க, வார்த்தைக்குள் அடங்காத அவளது உள்ளக் கொதிப்பை தாரை தாரையாய் தன் கண்ணீரினால் நன்றியை தெரிவித்தாள் அந்த மன்னிக்கப்பட்ட பேதை.

மெதுவாய் எழுந்து நடக்கலானாள்,..உலகமே புதிதாய்த் தோன்றிற்று,..சிலு சிலுவென தென்றல் வீசி அவள் ஊனையும் உயிரையும் ஆற்றிற்று,..வழியில் அவள் வலியறிந்த யாரோ கொடுத்தனுப்பினார் போலும்,.. ஒரு சிறுமி ஒரு முக்காட்டுத் துணியை அவள் மீது போர்த்தி விட்டு ஓடினாள். அது அவளுக்கு அவள் மன்னிப்புக்குக் கிடைத்த அடையாளமாய் அங்கிரமாய்த் தோன்றிற்று...எட்டி நடைப் போட்டாள்...இனி வாழ்வு அவள் பக்கம்....

Saturday, March 17, 2012

நிபந்தனையற்றக் காதல்!




விவாதங்களும்...
வெட்டிக் கோபமும்...
விதண்டாவாதப் பேச்சுக்களும்..,
படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தன.

பின்,
எப்படிச் சொல்வது ?
அவன் சொன்னது பொய் என்பதை
நான் அறிவேனென்று!



**நிபந்தனையற்றக் காதல்:
எப்பொழுதும், எது நேரிடினும் நேசிப்பேன்
பி.கு: என் கவிதைகள் சொந்த அனுபவம் அல்ல :-))

Thursday, March 15, 2012

அர்த்தராத்திரி ஊர்வலம்



கவிதையா...?
அவனைப் பற்றியா...???
சத்தியமாக அவன் பெயரைக் கூட உச்சரிக்க கூடாதென
எழுந்து எட்டி நடை போட்டேன்....அலட்சியமாய்.

மெதுவாய் ஒரு குட்டிக் கவிதை,
தவழ்ந்து வந்து ஒட்டிக் கொண்டது....

கண்டும் காணததாய் இன்னும் வேக நடை போட்டேன்
தர தரவென என் கால் பிடித்து
மண்ணில் புரண்ட படி அழுது முரண்டது...
பாவமென தூக்கி இடுப்பில் இடுக்கிக் கொண்டேன்!

இன்னும் சில அடியில் ....
ஒரு செல்லக் கவிதை மெல்ல அடிப்போட்டு
கையைக் கட்டிக் கொண்டது...
சரி வந்து தொலையட்டுமென விட்டு விட்டேன்!

பின் ஒரு கவிதை தோள் அணைத்துக் கொண்டது,...
ஒன்று கழுத்தைக் கட்டிக் கொண்டது...
இன்னுமொன்று முகத்தோடு முகம் இழைத்தது..

இப்படியாய் கழிந்த அடுத்த சில நொடிகளில்
அந்த நிசப்த இரவில்....
ஒராயிரம் கழிவிரக்க கவிதைகளோடு ஊர்வலம் போய்க் கொண்டிருந்தேன்...ஒற்றையாய்