Tuesday, July 10, 2012

ரெடி, லைட்ஸ், கேமரா, ஆக்க்ஷன் - 4


இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வானது, ஏறக்குறைய பாட்டியுடன் படம் பார்த்த அதே காலக் கட்டத்தில், கி.பி. இருபதாம் நூற்றாண்டின் கடைசியில், நிகழ்ந்ததாக அகழ்வாராய்ச்சி வல்லுனர்களால் சொல்லப்படுகிறது.

மறுபடியும் கொசுவத்திச் சுருளச் சுத்தறேன்...

அப்போ நாங்க முஸ்லிம் தெருவுல வாடகைக்கு இருந்தோம். நாலாவது தெருன்னு நினைக்கிறேன். வித்தியாசமா கலர் கலரா முக்கோணம், சதுரம், செங்கோணம், அரக்கோணம் மாதிரியான டிசைன் உள்ள பீங்கான் ஸ்லாப்ஸ் தரையிலையும், பாதி சுவர் வரையும் பதிச்ச வீடு.



சுவற்றோட பெரிய கண்ணாடி வச்ச அலமாரிகள் அமைந்த அறைகள், மொட்ட மாடிக்குப் போக மரத்தாலான படிக்கட்டு, புறக்கடை, பின்னால சமையல்கட்டுக்கு மட்டும் ஓடு வேய்ஞ்சிருக்கும்,,அப்பறம் முன்னால ரொம்ப பெரிய திண்ணை அத முழுசா மூடி கிரில் போட்டிருக்கும்,...இப்படி இது என்ன ஆர்க்கிடெக்கசரோ அந்த கொத்தனாருக்குத் தான் வெளிச்சம்.
நானும் என் தங்கையும் அந்த திண்ணைல தான் விளையாடனும்முன்னு எங்கம்மா கண்டிஷனா சொல்லிருவாங்க. நாங்களும் ஸூவுல, கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்ட குரங்குங்க மாதிரி ( நான் பண்ண சேட்டைக்கு குரங்குன்னு தான சொல்ல முடியும். கிளின்னா சொல்ல முடியும்) 


தெருவுல மத்த குழந்தைங்க எல்லாம் ஒடிப் பிடிச்சு, லாக் & கீ, பாண்டி, நொண்டி விளையாடறதப் பாவமாப்.... பார்த்துட்டு இருப்போம். வீக் எண்ட்லெல்லாம் ஏண்டா வருதுன்னு இருக்கும். அப்பறம் என்னங்க சும்மா, பந்த் அமல்ல இருக்கிற மாதிரியே வீட்ல ஒரு ஃபீலக் கொடுத்திட்டு இருந்தா யாருக்குத் தான் போரடிக்காது..?

பக்கத்து வீட்டு மெஹராஜ் அக்கா, நூர் ஆண்டி, எதிர்த்த வீட்டு பெத்தா (பாட்டிய முஸ்லிம்ஸ் பெத்தான்னு தான் கூப்பிடுவாங்க) இப்படி யாராவது வந்து வெளிக் கதவ தட்டிக் கூப்பிட்டா செம ஜாலியாகிடுவோம். அந்த சைக்கிள் கேப்புல் நாங்க எஸ்கேப் ஆகிடுவோம்ல,...அதனால தான். ஹி..ஹி..

இப்படி ஒரு சனிக்கிழமை ம்தியம்  சாப்பாட ஃபுல் கட்டு கட்டிட்டு திண்ணைல ஒரு மாதிரி மந்தமா உட்கார்ந்துட்டு இருந்தேன். ஆமா, அதே பூட்டிய கதவு மட்டும் க்ரில் திண்ணைல தான். (எங்கம்மாவுக்கு தான் தெரியுமே கதவ திறந்துப் போட்டா நாய்க்குட்டி மாதிரி நான் ஒடிப் போயிடுவேன்னு.)

அப்போ எதிர்த்த வீட்டு அக்கா அம்மாவ பார்க்க வந்தாங்க, அவங்க வீடு அம்மாவுக்கு ரொம்ப பழக்கம். அவங்க ஒரு கூட்டு குடும்பமா இருந்தாங்க. பாட்டா செருப்புக் கடை, அப்பறம் “டிசைன்ஸ்ன்னு சின்னதா குழந்தைங்க ட்ரெஸ் விக்கிற ஸ்டோர் இரண்டு வச்சிருந்தாங்க.
அவங்க வீடல பெரிய வாப்பா, சின்ன வாப்பா, உம்மா(முத்தம் இல்லிங்க, உருதுல அம்மா), இன்னொரு உம்மா (சித்தி..சின்ன வாப்பா வைஃப்), அப்பறம் அவங்க மூணு பசங்க, 4 பொண்ணுங்க, பெத்தா ன்னு வீடே ஹிந்தி படம் கல்யாண வீடு மாதிரி இருக்கும்.

ஏன் ஹிந்தி படம் சொன்னேன் தெரியுமா,..அவங்க எப்பவும் தலைய முக்காடு போடிருப்பாங்க, உம்மா எல்லாம் வீட்ல பூப்போட்ட லுங்கி கட்டி, தாவணி மாதிரி போட்டு கழுத்து நிறையா கருக மணி தாலி போட்டிருப்பாங்க. வெளியப் போனா மட்டும் ஜிகு ஜிகுன்னு சேலை கட்டிருப்பாங்க. (அதுவும் இருட்டினாப்பறம் தான் அவங்க அந்த தெருவ விட்டு வருவாங்க). இப்படி தமிழ் மாதிரி பழக்கம், லுக் இல்லைன்னா எனக்கு அவங்க ஹிந்தி, அவ்வளவு தான்.

என்ன, இதுக்கே இப்படிங்கறீங்க, நான் அப்பல்லாம் அமெரிக்காவும், கேரளாவும் பக்கத்து பக்கத்து நாடுன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன் தெரியுமா...? அப்பறம், என்னங்க அமெரிக்கவுலருந்து வந்து என் கிளாஸ்ல சேர்ந்த பொண்ணும் இங்கிலிஷ் மட்டும் தான் பேசினா, கேரளாவுல இருந்து வந்த ரேஷ்மியும் இங்கிலிஷ் மட்டும் தான் பேசினா. தமிழ் தெரில, ஒன்லி இங்கலீஷ்ன்னா அவங்க ஃபாரின். எப்படி என் ஒண்ணாங் கிளாஸ் லாஜிக். அதே எம்.ஜி.ஆர் சிவாஜி கன்ஃபூஷன் கதை தான் இங்கையும். நல்ல வேளை சென்னைல அதுக்கப்பறமா படிச்சேன். இல்லைனா, நான் கன்ஃபுஷன்ஸ் ஆஃப் இண்டியாவா இருந்திருப்பேன் (இப்ப மட்டும் என்ன வாழுதுங்கறீங்களா..)

ஒ.கே. ஒவர் டு எதிர்த்த வீடு. அவங்க வீட்ல அண்ணன்மாரெல்லாம் ஒண்ணு கடைல வேலை பார்த்தாங்க இல்லைனா படிக்க ட்ரை பண்ணிட்டுருந்தாங்க. அக்காமரெல்லாம் ஒண்ணும் சரியா படிச்ச மாதிரி தெரியல. அவங்க தான் என் ஃப்ரெண்ட்ஸ்.

அன்னைக்கு வீட்டுக்கு வந்த அக்கா, தர்கா தெருல கல்யாணம் ஆகி அப்பறம் தலாக் ஆகி வீட்ல இருந்த அவங்க வீட்லயே ரொம்ப அழகான பெரிய வாப்பாவோட பெரிய பொண்ணு பெரிய மெஹராஜ் அக்கா. (ஸ்ஸ்..அப்பா மூச்சு வாங்குது) அவங்களுக்கு அப்பறம் படிப்பு ஏறாம வீட்ல தீப்பெட்டி ஒட்டிக்கிட்டிருந்த கனி அக்கா, அப்பறம் மெகரூன்னிஸா அக்கா, கடைசியா அவங்க வீட்டு கடைக்குட்டி என்னை விட 3 வயசு மூத்த, ஆனா ஃபெயில் ஆகி இரண்டாங்கிளாஸ் படிக்கிற (நான் ஃபர்ஸ்ட் ஸ்டார்ண்ட்) சின்னக் கனி.

என் ஸ்கூல்ல கொடுக்கிற புக்ஸ்செல்லாம் முதல்ல (இங்க்லீஷ் டெக்ஸ்ட் புக், நான் டிடைல் புக்) அவங்க வீட்டுக்கு தான் எடுத்துட்டு போய் ஏதோ ஷேக்ஸ்பியர் மெக்பெத்தா வாசிக்கிற மாதிரி வாசிச்சு காமிப்பேன். மாமி, பாய் மாமா, அக்காவெல்லாம் ரொம்ப ரசிப்பாங்க.

அப்படி அன்னைக்கு அக்கா வந்தப்போ தான் பின்னாலயே சின்னக் கனியும் வந்தாள். ரொம்பவும் அவசரத்துல இருந்தா. வந்து என்கிட்ட “ஒரு ருவாய் இருக்கான்னு ஒரு ருவாய் இருக்கான்னுஅவசரப்படுத்தினா. நான் அம்மாவக் கேட்கணும்னு சொன்னேன். 

இதெல்லாம் அம்மா பக்கத்துல தான் நடந்துகிட்டு இருந்தது. அம்மா சுவரசியமா ஏதோ பேசிட்டு இருந்தாங்க. நான் அம்மா கிட்ட ஒரு ரூவாய் கேட்ட்து காதுல விழவேயில்ல.


கனி வேற “ஐய்யோ சீக்கரம் வா, சீக்கரம் வான்னு டென்ஷன் பண்றா...என்ன விஷயமுன்னு புரியல. ஆனா அவளோட பதட்டமும் என்னைய தொத்திகிச்சு.

அம்மா அலமாரில கடைக்கு போய்ட்டு கொண்டு வருகிற சில்லரை வைக்கிற இடம் தெரியும். அங்க ஒரு ருவாய் போய் எடுத்துட்டு வந்து கொடுத்தேன். அவ இன்னும் ஒரு நாலணா இருந்தா எடுத்துட்டு வான்னு சொல்றா. நான் எப்படா வீட்லர்ந்து வெளியில போய் ஏதாவது விளையாடலாம்னு நினைச்சா இவ அத எடுத்துட்டு வா, இத எடுத்துட்டு வான்னு சொல்லிட்டுருக்காளேன்னு வேற எரிச்சலா வருது. சரி, சரின்னு நாலணாவும் எடுத்துட்டு ஒடி வந்தேன்.

வா, வா போலாம்னு என் கையப் பிடிச்சிட்டு (இழுத்துட்டு) போனா. நானும் வீட்ட விட்டுக் கிளம்பினா போதும்னு அடிச்சேன், பிடிச்சேன்னு அம்மாகிட்ட விளையாடப் போறேன்னு சொல்லியும் சொல்லாமலும் அவக் கூட அந்த மொட்ட வெயில வந்து தெருவுல நின்னா, பொட்டிக்கடைப்பக்கமா ஒரு கூட்டம் நிக்குது.

எல்லாம் அரை ட்ரவுசர் போட்ட எங்கத் தெரு, அப்பறம் பக்கத்து தெரு பசங்க.(அஞ்சு பேரு) எனக்கு இன்னமும் என்ன நடக்குதுனே புரியல. கனியேட கசின் பிரதர் ஒருத்தனும் இருந்தான். எல்லாருக்கும் அந்தப் பெட்டிக் கடைலர்ந்து 10 பைசாவுக்கு 10 ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பாங்களே அது வாங்கிக் கொடுத்தான். 


கையெல்லாம் பிசுப்பிசுக்க அத வாயில போட்டுட்டு கனிக்கிட்ட கேட்டேன் “என்ன விளையாடப் போறோம்ன்னு. அவ அந்தப் பெட்டிக்கடைப் பக்கமா ஒட்டிருந்த போஸ்டரக் காட்டி அத தான் பார்க்கப் போறோம்னு சொன்னா.

“யானைப் படம், “கலர்ப் படம் அதுவும் ரஜினிப் படம். எனக்கு சந்தோஷம் தாங்கல. கொஞ்சம் அம்மாவ நினைச்சா பயமா இருந்துச்சு ஆனா கூட இருந்த ஆறு பேரப் பார்த்தப்போ என் பயமெல்லாம் அமிர்தாஞ்சன் குணப்படித்திய தலவலி மாதிரி போயே போச்சு,..இட்ஸ் கான்,..போயிந்தே..

ஏழு பேரும் கையப் பிடிச்சிக்கிட்டு வரிசையா அந்த மொட்ட வெயிலுல குடியரசு தின விழா பரேடு மாதிரி ஜாலியா ஆரஞ்சு மிட்டாய சப்பிட்டேப் போனோம். தெருவுல யாரும் இல்ல. இல்லைனா, அப்பவே வீட்டுக்கு நீயூஸ் போய் எனக்கு ஸ்ஷெல் பரேடு நடந்திருக்கும். ஆனா, விதி வேற மாதிரி யோசிச்சுருந்தது. எப்படின்னா - இவ படம் பார்த்துட்டு வ்ரணும், வந்து வீட்ல நாலு மாத்து வாங்கணும், பின்னாளுலுல இவங்கம்மா இவள மொத்துனத பிளாக்ல இரண்டு மொக்க போஸ்ட் போடணும்னு.

சொப்பு சாமான், காய்கறி பலசரக்கு கடை, பேங்க் விளையாட்டு விளையாடறப்போ இருக்கிற ரொம்ப பெரியவங்க ஆன மாதிரியான த்ரில்ல விட இது செம த்ரில்லா இருந்துச்சு. நாங்களே லைன்ல நின்னு டிக்கெட் வாங்கி, எங்கம்மா அப்பா கூட்டிட்டு போற பின்னாடி சீட்டு இல்லாம, சில சமயம் அதுக்கு மேல போய் பால்கனில தனியா உட்கார்ந்து தீவுலர்ந்து பார்க்கற மாதிரி எல்லாம் இல்லாம. ஃப்ர்ஸ்ட் ரோ சீட்.

ஃபர்ஸ்ட் ரோ!!! என்னோட பல நாள் கனவு. எனக்கு எப்படி இருந்திருக்கும் பாருங்க. ஹய்யோ...மனசெல்லாம்  சந்தோஷமா இருந்த்து. நானும் கனியும் ஒரே சிரிப்பும் பேச்சுமா படம் பார்த்தோம் (அதுக்கப்பறம் நல்லா அழப் போறேன்னு தெரியாமா). 






“அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே பாட்டுக்கு எங்கூட வந்த பசங்களெல்லாம் டான்ஸ் வேற. செம ஜாலியா இருந்துச்சு. இன்டெர்வல்ல அந்த நாலணவுக்கு முறுக்கோ, கடல மிட்டாயோ ஏதோ வாங்கித் தின்னோம். படம் பாத்தப்பறம் கண்ணேல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு, காதெல்லாம் கூட ஒரு மாதிரி கொய்ய்ன்னு இருந்துச்சு. அந்த தியேட்டர்ல அக்கௌஸ்டிக் (Acoustics) சரியில்ல.

வீட்டுக்கு வந்தா,..அம்மா வாசலப் பாத்து நோக்கு வர்ம்ம் பிரக்கிடிஸ் பண்ணிட்டு இருந்தாங்க. நான் ஒண்ணும் தெரியாத பச்சப்பிள்ள மாதிரி முகத்த வச்சிக்கிட்டு உள்ள போனேன். அம்மாவும் என் பின்னாலயே வந்தாங்க. அம்மாவுக்கு நான் சினிமா போனது ஏற்கனவே தெரிஞ்சிருந்தது. பற் பல மிலிட்டரி விசாரணைக்குப் பின் என் வீர தீர செயலை மெச்சி வகைதொகை இல்லாமல் அடி, மொத்து, குட்டு என இன்னும் பல அம்மாமார்கள் மட்டுமே அறிந்த அரிய வகை மார்சியல ஆர்ட்ஸ்(Martial Arts) என் மேல் இயற்றப்பட்டது. அப்பப்பா,...மறக்கவே முடியாது நான் பார்த்த இந்த சினிமா அனுபவமும், அதுக்கு வாங்கின அடியும்.

அதுக்கப்பறம் நான் கனி கூட விளையாட அம்மாவால இரகசியத் தடை விதிக்கப்பட்டிருந்துச்சு. ஆனாலும் நான் அவளா இரகசியமாப் பார்த்து பார்த்துச் சிரிப்பேன். ஆனா அவளோ, ஏதோ நான் அவள சினிமாவுக்கு ஏமாத்திக் கூட்டிட்டுப் போன மாதிரி கோபிச்சிக்கிட்டா...ஆல் டைம்ஸ்.


அடுத்த பதிவுல என் ஆடுகாலி மாமா(அம்மா வீட்ல கடைக்குட்டி) வானர பட்டாளத்த “அனிமல்ஸ் ஃபிலிம் கூட்டிட்டு போய் "போங்கு" வாங்குன கதை...