Wednesday, June 6, 2012

ரெடி, லைட்ஸ், கேமரா, ஆக்க்ஷன் - 3

ஆக,...இப்படியாப்பட்ட, அப்படியாப்பட்ட புலி பாட்டிக் கூட பிளாக் & ஒயிட் இதயக்கனி வாத்தியார் படம் பார்க்க கொண்டாட்டமாய் ரெடியாகி, தெருவுல இறங்குனா,...

ஊரே அமைதியாய்,...இதமாய் வாடைக் காத்து வீசிக்கிட்டு,...சோன்பப்டி காரன் மணியடிச்சிட்டு போற சத்தமும்,...குடி தண்ணி குழாய் முன்னால கலர் கலராய் குடமெல்லாம் அழகாய் அடுக்கி,..புழுதியெல்லாம் அடங்கி,...ஒவ்வொரு வீட்டு முன்னும் அன்னைக்கு சாயங்காலம் போட்ட கோலம் அழிஞ்சும் அழியாமலும்...

கொஞ்சமாய் மெயின் ரோட்ட ஓட்டிப் போகிறப்போ ரோட்டோரமாய் பெட்ரோமேக்ஸ் லைட் “ஸ்ஸ்ஸ் சத்தத்துல கைலி கட்டின அண்ணன்மாரெல்லாம் மசாலா மணக்க அவசர அவசரமாய்ப் பரோட்டோ போட்டுகிட்டு,...எங்கையோ ஏதோ கட்சிக் கூட்டத்துல கேட்கற தூரத்து குழாய் ஸ்பீக்கர் சத்தத்தோட,..

நடை சாத்தின கோயில், கோயில் வாசல்ல கடைய மூடிக்கிட்டு இருக்கிற ரோட்டோர விளையாட்டுச் சாமான் கடைக்காரர், கொஞ்சம் குழப்பமான பூ வாசனை வீசும் பூக்கடை, வீட்டுக்குப் போய்ட்டு இருக்க பலூன் காரர்னு,..ஊரே வித்தியாசமாவும், புதுசாவும் ....ஹய்யோ..!!! பாட்டிக் கூடப் படத்துக்கு போறதுக்கு அது செம பில்டப்பக் கொடுக்கும். இன்னும் அத நினைச்சா எவ்வளவு சுகமாய் இருக்குத் தெரியுமா...

எத்தனை அழுது சாதித்தாலும் அம்மா வாங்கித் தராத பஞ்சு பஞ்சான சோன்பப்டி தினசரி தாள்ல சுருட்டியது ஒரு கையிலையும், பாட்டி விரல இன்னொரு கையிலயும் பிடிச்சிக்கிட்டு,..குதியாட்டாம் போட்டுக்கிட்டு, கேள்வி மேல கேள்வி கேட்டிக்கிட்டு போவேன்.

அதுவும் இந்த சோன்பப்டிக் காரர் எல்லாம் நல்லவங்களாவே இருந்தாங்க. ஒரு ரூபாய்க்கு சோன்பப்டி வாங்குனா.., பாட்டி “சின்னப் பிள்ள, கூடக் கொஞ்சூண்டு சோன்பப்டி தாப்ப..ன்னு சொன்னா இன்னும் கொஞ்சம் வஞ்சனையே இல்லாம தருவாங்க.

பாட்டி ரொம்ப ரொம்ப பழைய பேருள்ள, ரொம்ப பழைய கட்டிடமாயிருக்கிற சினிமா தியேட்டருக்குத் தான் கூட்டிடு போவாங்க நாரயணசாமி, நியூ முத்து டாக்கீஸ் இப்படி. 

அங்கெல்லாம் ஒரு மாதிரி வெத்தல, பீடி வாசனை கூட அடிக்கும். மழை பெய்ஞ்சா ரோட்ல நடக்க ரவுசு பண்ற நான், அந்த வாசனைப் பற்றியெல்லாம் கவலைப்படாம ஜாலியா பாட்டிக்கிட்ட இன்டர்வெல்ல என்ன வாங்கித் தரச் சொல்லாம்னு சீரியசா “திங்க் பண்ணிட்டு இருப்பேன். ஹி..ஹி..என் கவல எனக்கு.

பாட்டி டிக்கெட் வாங்குற இடத்தில பாட்டி மாதிரியே நடை உடை பாவனையுடன் கூடிய ஒரு லேடிய ஃபிரெண்டு பிடிச்சுப்பாங்க.

பாட்டி பெஞ்சு இல்லைனா எப்பவாது தரை டிக்கெட் வாங்குவாங்க. கால நீட்டி உட்கார்ந்துகலாமில்ல. ஒரு தடவ தரை டிக்கெட் போனதிலர்ந்து எனக்கு பெஞ்சு பிடிக்காது, எட்டி எட்டிப் பார்க்கனும், போரடிச்சா விளையாட முடியாது. தரை மாதிரி நிறையா இடம் இருக்காது. சில தியேட்டர்ல மண்ணு போட்டுருப்பாங்க. அதுல கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடலாம். இப்படி நெறையா அட்வான்டேஜ் ( “ஹலோ, நான் தரை லொக்கலுன்னு நான் எப்பவாது சொன்னா உண்மையத் தான் சொல்றேன்னு நம்புங்க)

 

அப்பறம் பாட்டி ரொம்ப உயரம் அதனால பாட்டி கால நீட்டி உட்கார்ந்தா நான் சைக்கிள போற மாதிரி இரண்டு பக்கமும் கால போட்டு அவங்க பெருவிரல பிடிச்சுட்டு உட்கார்ந்துகிட்டு சண்டக் காட்சி வரப்பல்லாம் பாட்டியோட  ஒரு பாதத்த நம்பியாராவும், இன்னொரு பாதத்த எம்.ஜி.ஆராகவும் நினைச்சி முட்டி முட்டி மோதி சண்ட போடுவேன்.

 நாகேஷ் வர்றப்பல்லாம், ஏதோ எல்லாம் புரிஞ்ச மாதிரி சிரிப்பேன். சோக சீன் வந்தா பாட்டி நீட்டின கால்ல மல்லாக்கப் படுத்துக்கிட்டு சினிமா தியேட்டர் விட்டத்தப் பார்த்துக் கிட்டு எப்ப இன்டெர்வல் வரும்ன்னு யோசனை பண்ணிட்டு இருப்பேன்.

இன்டெர்வல்ல அம்மா, அப்பா வாங்கித் தராத கடல மிட்டாய், முறுக்கு, அப்பறம் அந்த அரஞ்சு கலர் பஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுட்டு...அம்மா கூட  கலர் படமும், பாட்டிக் கூட பிளாக் & ஒயிட் படமும் பார்த்துட்டு உலகிலயே அதிகமான பணக்காரன விடவும், உலக அழகிய விடவும், முக்தியடைஞ்ச ஜடாமுடி சாமியார விடவும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேங்க...

ஆனாலும் வயசு ஆக ஆகத் தாங்க பிரச்சனயே வருது...வயசோட சேர்ந்து ஆசையும் வளர்துல... ஆமாங்க அடுத்த பதிவுல நான் என் ஃப்ரெண்ட்ஸோட பாத்த படத்த பத்தி...

ஓ,....அதுல என்ன பெரிய விஷயம்ங்கறீங்களா. அப்போ நான் ஃப்ர்ஸ்ட் ஸ்டர்ண்ட்,...ஒண்ணாங் கிளாஸ் தான் படிச்சிட்டு இருந்தேன்.

                         -   அடுத்த பதிவுல எனக்கு டின்னு கட்டின படம் பார்க்கலாம்....அவ்வ்வ்...

No comments:

Post a Comment

வானவில்லின் வண்ணத்தைப் பற்றிய வர்ணனைகள்