Showing posts with label புறம். Show all posts
Showing posts with label புறம். Show all posts

Tuesday, July 10, 2012

ரெடி, லைட்ஸ், கேமரா, ஆக்க்ஷன் - 4


இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வானது, ஏறக்குறைய பாட்டியுடன் படம் பார்த்த அதே காலக் கட்டத்தில், கி.பி. இருபதாம் நூற்றாண்டின் கடைசியில், நிகழ்ந்ததாக அகழ்வாராய்ச்சி வல்லுனர்களால் சொல்லப்படுகிறது.

மறுபடியும் கொசுவத்திச் சுருளச் சுத்தறேன்...

அப்போ நாங்க முஸ்லிம் தெருவுல வாடகைக்கு இருந்தோம். நாலாவது தெருன்னு நினைக்கிறேன். வித்தியாசமா கலர் கலரா முக்கோணம், சதுரம், செங்கோணம், அரக்கோணம் மாதிரியான டிசைன் உள்ள பீங்கான் ஸ்லாப்ஸ் தரையிலையும், பாதி சுவர் வரையும் பதிச்ச வீடு.



சுவற்றோட பெரிய கண்ணாடி வச்ச அலமாரிகள் அமைந்த அறைகள், மொட்ட மாடிக்குப் போக மரத்தாலான படிக்கட்டு, புறக்கடை, பின்னால சமையல்கட்டுக்கு மட்டும் ஓடு வேய்ஞ்சிருக்கும்,,அப்பறம் முன்னால ரொம்ப பெரிய திண்ணை அத முழுசா மூடி கிரில் போட்டிருக்கும்,...இப்படி இது என்ன ஆர்க்கிடெக்கசரோ அந்த கொத்தனாருக்குத் தான் வெளிச்சம்.
நானும் என் தங்கையும் அந்த திண்ணைல தான் விளையாடனும்முன்னு எங்கம்மா கண்டிஷனா சொல்லிருவாங்க. நாங்களும் ஸூவுல, கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்ட குரங்குங்க மாதிரி ( நான் பண்ண சேட்டைக்கு குரங்குன்னு தான சொல்ல முடியும். கிளின்னா சொல்ல முடியும்) 


தெருவுல மத்த குழந்தைங்க எல்லாம் ஒடிப் பிடிச்சு, லாக் & கீ, பாண்டி, நொண்டி விளையாடறதப் பாவமாப்.... பார்த்துட்டு இருப்போம். வீக் எண்ட்லெல்லாம் ஏண்டா வருதுன்னு இருக்கும். அப்பறம் என்னங்க சும்மா, பந்த் அமல்ல இருக்கிற மாதிரியே வீட்ல ஒரு ஃபீலக் கொடுத்திட்டு இருந்தா யாருக்குத் தான் போரடிக்காது..?

பக்கத்து வீட்டு மெஹராஜ் அக்கா, நூர் ஆண்டி, எதிர்த்த வீட்டு பெத்தா (பாட்டிய முஸ்லிம்ஸ் பெத்தான்னு தான் கூப்பிடுவாங்க) இப்படி யாராவது வந்து வெளிக் கதவ தட்டிக் கூப்பிட்டா செம ஜாலியாகிடுவோம். அந்த சைக்கிள் கேப்புல் நாங்க எஸ்கேப் ஆகிடுவோம்ல,...அதனால தான். ஹி..ஹி..

இப்படி ஒரு சனிக்கிழமை ம்தியம்  சாப்பாட ஃபுல் கட்டு கட்டிட்டு திண்ணைல ஒரு மாதிரி மந்தமா உட்கார்ந்துட்டு இருந்தேன். ஆமா, அதே பூட்டிய கதவு மட்டும் க்ரில் திண்ணைல தான். (எங்கம்மாவுக்கு தான் தெரியுமே கதவ திறந்துப் போட்டா நாய்க்குட்டி மாதிரி நான் ஒடிப் போயிடுவேன்னு.)

அப்போ எதிர்த்த வீட்டு அக்கா அம்மாவ பார்க்க வந்தாங்க, அவங்க வீடு அம்மாவுக்கு ரொம்ப பழக்கம். அவங்க ஒரு கூட்டு குடும்பமா இருந்தாங்க. பாட்டா செருப்புக் கடை, அப்பறம் “டிசைன்ஸ்ன்னு சின்னதா குழந்தைங்க ட்ரெஸ் விக்கிற ஸ்டோர் இரண்டு வச்சிருந்தாங்க.
அவங்க வீடல பெரிய வாப்பா, சின்ன வாப்பா, உம்மா(முத்தம் இல்லிங்க, உருதுல அம்மா), இன்னொரு உம்மா (சித்தி..சின்ன வாப்பா வைஃப்), அப்பறம் அவங்க மூணு பசங்க, 4 பொண்ணுங்க, பெத்தா ன்னு வீடே ஹிந்தி படம் கல்யாண வீடு மாதிரி இருக்கும்.

ஏன் ஹிந்தி படம் சொன்னேன் தெரியுமா,..அவங்க எப்பவும் தலைய முக்காடு போடிருப்பாங்க, உம்மா எல்லாம் வீட்ல பூப்போட்ட லுங்கி கட்டி, தாவணி மாதிரி போட்டு கழுத்து நிறையா கருக மணி தாலி போட்டிருப்பாங்க. வெளியப் போனா மட்டும் ஜிகு ஜிகுன்னு சேலை கட்டிருப்பாங்க. (அதுவும் இருட்டினாப்பறம் தான் அவங்க அந்த தெருவ விட்டு வருவாங்க). இப்படி தமிழ் மாதிரி பழக்கம், லுக் இல்லைன்னா எனக்கு அவங்க ஹிந்தி, அவ்வளவு தான்.

என்ன, இதுக்கே இப்படிங்கறீங்க, நான் அப்பல்லாம் அமெரிக்காவும், கேரளாவும் பக்கத்து பக்கத்து நாடுன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன் தெரியுமா...? அப்பறம், என்னங்க அமெரிக்கவுலருந்து வந்து என் கிளாஸ்ல சேர்ந்த பொண்ணும் இங்கிலிஷ் மட்டும் தான் பேசினா, கேரளாவுல இருந்து வந்த ரேஷ்மியும் இங்கிலிஷ் மட்டும் தான் பேசினா. தமிழ் தெரில, ஒன்லி இங்கலீஷ்ன்னா அவங்க ஃபாரின். எப்படி என் ஒண்ணாங் கிளாஸ் லாஜிக். அதே எம்.ஜி.ஆர் சிவாஜி கன்ஃபூஷன் கதை தான் இங்கையும். நல்ல வேளை சென்னைல அதுக்கப்பறமா படிச்சேன். இல்லைனா, நான் கன்ஃபுஷன்ஸ் ஆஃப் இண்டியாவா இருந்திருப்பேன் (இப்ப மட்டும் என்ன வாழுதுங்கறீங்களா..)

ஒ.கே. ஒவர் டு எதிர்த்த வீடு. அவங்க வீட்ல அண்ணன்மாரெல்லாம் ஒண்ணு கடைல வேலை பார்த்தாங்க இல்லைனா படிக்க ட்ரை பண்ணிட்டுருந்தாங்க. அக்காமரெல்லாம் ஒண்ணும் சரியா படிச்ச மாதிரி தெரியல. அவங்க தான் என் ஃப்ரெண்ட்ஸ்.

அன்னைக்கு வீட்டுக்கு வந்த அக்கா, தர்கா தெருல கல்யாணம் ஆகி அப்பறம் தலாக் ஆகி வீட்ல இருந்த அவங்க வீட்லயே ரொம்ப அழகான பெரிய வாப்பாவோட பெரிய பொண்ணு பெரிய மெஹராஜ் அக்கா. (ஸ்ஸ்..அப்பா மூச்சு வாங்குது) அவங்களுக்கு அப்பறம் படிப்பு ஏறாம வீட்ல தீப்பெட்டி ஒட்டிக்கிட்டிருந்த கனி அக்கா, அப்பறம் மெகரூன்னிஸா அக்கா, கடைசியா அவங்க வீட்டு கடைக்குட்டி என்னை விட 3 வயசு மூத்த, ஆனா ஃபெயில் ஆகி இரண்டாங்கிளாஸ் படிக்கிற (நான் ஃபர்ஸ்ட் ஸ்டார்ண்ட்) சின்னக் கனி.

என் ஸ்கூல்ல கொடுக்கிற புக்ஸ்செல்லாம் முதல்ல (இங்க்லீஷ் டெக்ஸ்ட் புக், நான் டிடைல் புக்) அவங்க வீட்டுக்கு தான் எடுத்துட்டு போய் ஏதோ ஷேக்ஸ்பியர் மெக்பெத்தா வாசிக்கிற மாதிரி வாசிச்சு காமிப்பேன். மாமி, பாய் மாமா, அக்காவெல்லாம் ரொம்ப ரசிப்பாங்க.

அப்படி அன்னைக்கு அக்கா வந்தப்போ தான் பின்னாலயே சின்னக் கனியும் வந்தாள். ரொம்பவும் அவசரத்துல இருந்தா. வந்து என்கிட்ட “ஒரு ருவாய் இருக்கான்னு ஒரு ருவாய் இருக்கான்னுஅவசரப்படுத்தினா. நான் அம்மாவக் கேட்கணும்னு சொன்னேன். 

இதெல்லாம் அம்மா பக்கத்துல தான் நடந்துகிட்டு இருந்தது. அம்மா சுவரசியமா ஏதோ பேசிட்டு இருந்தாங்க. நான் அம்மா கிட்ட ஒரு ரூவாய் கேட்ட்து காதுல விழவேயில்ல.


கனி வேற “ஐய்யோ சீக்கரம் வா, சீக்கரம் வான்னு டென்ஷன் பண்றா...என்ன விஷயமுன்னு புரியல. ஆனா அவளோட பதட்டமும் என்னைய தொத்திகிச்சு.

அம்மா அலமாரில கடைக்கு போய்ட்டு கொண்டு வருகிற சில்லரை வைக்கிற இடம் தெரியும். அங்க ஒரு ருவாய் போய் எடுத்துட்டு வந்து கொடுத்தேன். அவ இன்னும் ஒரு நாலணா இருந்தா எடுத்துட்டு வான்னு சொல்றா. நான் எப்படா வீட்லர்ந்து வெளியில போய் ஏதாவது விளையாடலாம்னு நினைச்சா இவ அத எடுத்துட்டு வா, இத எடுத்துட்டு வான்னு சொல்லிட்டுருக்காளேன்னு வேற எரிச்சலா வருது. சரி, சரின்னு நாலணாவும் எடுத்துட்டு ஒடி வந்தேன்.

வா, வா போலாம்னு என் கையப் பிடிச்சிட்டு (இழுத்துட்டு) போனா. நானும் வீட்ட விட்டுக் கிளம்பினா போதும்னு அடிச்சேன், பிடிச்சேன்னு அம்மாகிட்ட விளையாடப் போறேன்னு சொல்லியும் சொல்லாமலும் அவக் கூட அந்த மொட்ட வெயில வந்து தெருவுல நின்னா, பொட்டிக்கடைப்பக்கமா ஒரு கூட்டம் நிக்குது.

எல்லாம் அரை ட்ரவுசர் போட்ட எங்கத் தெரு, அப்பறம் பக்கத்து தெரு பசங்க.(அஞ்சு பேரு) எனக்கு இன்னமும் என்ன நடக்குதுனே புரியல. கனியேட கசின் பிரதர் ஒருத்தனும் இருந்தான். எல்லாருக்கும் அந்தப் பெட்டிக் கடைலர்ந்து 10 பைசாவுக்கு 10 ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பாங்களே அது வாங்கிக் கொடுத்தான். 


கையெல்லாம் பிசுப்பிசுக்க அத வாயில போட்டுட்டு கனிக்கிட்ட கேட்டேன் “என்ன விளையாடப் போறோம்ன்னு. அவ அந்தப் பெட்டிக்கடைப் பக்கமா ஒட்டிருந்த போஸ்டரக் காட்டி அத தான் பார்க்கப் போறோம்னு சொன்னா.

“யானைப் படம், “கலர்ப் படம் அதுவும் ரஜினிப் படம். எனக்கு சந்தோஷம் தாங்கல. கொஞ்சம் அம்மாவ நினைச்சா பயமா இருந்துச்சு ஆனா கூட இருந்த ஆறு பேரப் பார்த்தப்போ என் பயமெல்லாம் அமிர்தாஞ்சன் குணப்படித்திய தலவலி மாதிரி போயே போச்சு,..இட்ஸ் கான்,..போயிந்தே..

ஏழு பேரும் கையப் பிடிச்சிக்கிட்டு வரிசையா அந்த மொட்ட வெயிலுல குடியரசு தின விழா பரேடு மாதிரி ஜாலியா ஆரஞ்சு மிட்டாய சப்பிட்டேப் போனோம். தெருவுல யாரும் இல்ல. இல்லைனா, அப்பவே வீட்டுக்கு நீயூஸ் போய் எனக்கு ஸ்ஷெல் பரேடு நடந்திருக்கும். ஆனா, விதி வேற மாதிரி யோசிச்சுருந்தது. எப்படின்னா - இவ படம் பார்த்துட்டு வ்ரணும், வந்து வீட்ல நாலு மாத்து வாங்கணும், பின்னாளுலுல இவங்கம்மா இவள மொத்துனத பிளாக்ல இரண்டு மொக்க போஸ்ட் போடணும்னு.

சொப்பு சாமான், காய்கறி பலசரக்கு கடை, பேங்க் விளையாட்டு விளையாடறப்போ இருக்கிற ரொம்ப பெரியவங்க ஆன மாதிரியான த்ரில்ல விட இது செம த்ரில்லா இருந்துச்சு. நாங்களே லைன்ல நின்னு டிக்கெட் வாங்கி, எங்கம்மா அப்பா கூட்டிட்டு போற பின்னாடி சீட்டு இல்லாம, சில சமயம் அதுக்கு மேல போய் பால்கனில தனியா உட்கார்ந்து தீவுலர்ந்து பார்க்கற மாதிரி எல்லாம் இல்லாம. ஃப்ர்ஸ்ட் ரோ சீட்.

ஃபர்ஸ்ட் ரோ!!! என்னோட பல நாள் கனவு. எனக்கு எப்படி இருந்திருக்கும் பாருங்க. ஹய்யோ...மனசெல்லாம்  சந்தோஷமா இருந்த்து. நானும் கனியும் ஒரே சிரிப்பும் பேச்சுமா படம் பார்த்தோம் (அதுக்கப்பறம் நல்லா அழப் போறேன்னு தெரியாமா). 






“அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே பாட்டுக்கு எங்கூட வந்த பசங்களெல்லாம் டான்ஸ் வேற. செம ஜாலியா இருந்துச்சு. இன்டெர்வல்ல அந்த நாலணவுக்கு முறுக்கோ, கடல மிட்டாயோ ஏதோ வாங்கித் தின்னோம். படம் பாத்தப்பறம் கண்ணேல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு, காதெல்லாம் கூட ஒரு மாதிரி கொய்ய்ன்னு இருந்துச்சு. அந்த தியேட்டர்ல அக்கௌஸ்டிக் (Acoustics) சரியில்ல.

வீட்டுக்கு வந்தா,..அம்மா வாசலப் பாத்து நோக்கு வர்ம்ம் பிரக்கிடிஸ் பண்ணிட்டு இருந்தாங்க. நான் ஒண்ணும் தெரியாத பச்சப்பிள்ள மாதிரி முகத்த வச்சிக்கிட்டு உள்ள போனேன். அம்மாவும் என் பின்னாலயே வந்தாங்க. அம்மாவுக்கு நான் சினிமா போனது ஏற்கனவே தெரிஞ்சிருந்தது. பற் பல மிலிட்டரி விசாரணைக்குப் பின் என் வீர தீர செயலை மெச்சி வகைதொகை இல்லாமல் அடி, மொத்து, குட்டு என இன்னும் பல அம்மாமார்கள் மட்டுமே அறிந்த அரிய வகை மார்சியல ஆர்ட்ஸ்(Martial Arts) என் மேல் இயற்றப்பட்டது. அப்பப்பா,...மறக்கவே முடியாது நான் பார்த்த இந்த சினிமா அனுபவமும், அதுக்கு வாங்கின அடியும்.

அதுக்கப்பறம் நான் கனி கூட விளையாட அம்மாவால இரகசியத் தடை விதிக்கப்பட்டிருந்துச்சு. ஆனாலும் நான் அவளா இரகசியமாப் பார்த்து பார்த்துச் சிரிப்பேன். ஆனா அவளோ, ஏதோ நான் அவள சினிமாவுக்கு ஏமாத்திக் கூட்டிட்டுப் போன மாதிரி கோபிச்சிக்கிட்டா...ஆல் டைம்ஸ்.


அடுத்த பதிவுல என் ஆடுகாலி மாமா(அம்மா வீட்ல கடைக்குட்டி) வானர பட்டாளத்த “அனிமல்ஸ் ஃபிலிம் கூட்டிட்டு போய் "போங்கு" வாங்குன கதை...


Wednesday, March 21, 2012

சிறியதாகவும்,..பெரியதாகவும்..



ஹிட்லரின் அட்டுழியத்தையும்...
ஹிரோஷிமா, நாகாசாகி அழிவையும்...
இரட்டைக் கோபுர நாச வேலையின் போதும்
அவன்..
வேதனிப்பாதாய்ச் சொல்லிருப்பான்!

நாமும் கூட அவனுடன்
உச்சுக் கொட்டி
திட்டித் தீர்த்திருப்போம்...
முள்ளிவாய்க்காலில் அவன் முகத்திரை கிழியும் வரை!

முகபாவம், உடை, நடை, தோரணை என
நம்மைப் போலவே
நம்மிலும் பல
ராஜபக்க்ஷேக்கள்....
சிறியதாகவும்,..பெரியதாகவும்...

Monday, October 11, 2010

கடவுளை எழுப்புதல்!

ஓரு கட்டுபாடற்ற மாய உலகில்,...
முடிவிலியில்,...
அதிவேகமாய்,...
முழுமூச்சுடன்,..
பரபரவென பற்றியெரியும் தீக்கொழுந்து போல
என்னை நான் அதிகமாய் நேசிக்கத் தொடங்குகிறேன்,...
சுய நலமின்றி
இனி என் இன்ப துன்பங்களின் சாளரங்கள்
பிறர்க்காய் திறக்கும்...!

Friday, May 29, 2009

மன்னிப்பு...Sorry..Excuse Me...

  • ஹே,..மன்னிச்சுக்கோப்பா
  • சாரி,..... :-(((
  • தெரியமாச்செய்துட்டேன்...நிஜம்மா
  • மாப்பு கேட்கறேங்க
  • சாரி கேட்டோ.. (மலையாளம்)
  • ஷெமிக்கு..........(மலையாளம்)
  • சாரியண்டி........(தெலுங்கு....நமக்கு தலைவர் சொன்ன "இப்புடுச் சூடு"க்கு மேல தெலுங்கு தெரியாது :-)
  • பகுத் சாரி.... .....(ஹிந்தில சாரிக்கு என்ன? "ஷுகிரியா?" "தன்யவாத்"? ஹி.. ஹி ,..மே நோ ஹிந்தி ஆத்தா ஹை! :))) )
என்னடா,..திடீர்ன்னு மன்னிக்கச்சொல்றாளேன்னு நீங்க டெரர் ஆகிறது தெரியுது. அதுக்கு முன்னால ஏன் இப்படி ஒரு தலைப்புல பதிவு போட தோணுச்சுன்னா...ஏன் தோணுச்சுன்னா..?அச்சட்ச்சோ ...எப்படி தோணுச்சு.:-(,..சும்மா மானவாரியா அப்படியே ரோசிச்சப்ப இப்படி தோணுச்சுன்னு கதை சொல்ல மாட்டேன்,..இது ரொம்ப நாள ஓடிட்டு இருந்த ரோசனை தான். (ஆமா,..நாங்களும் சிந்திப்போம்லா..:-)


சரி விஷயத்துக்கு வாரேன்.

இப்ப யார பார்த்தாலும்,....
  • "இந்த வாழ்க்கை ரொம்ப டென்ச்னா இருக்கு,.."..
  • "டைம் இல்ல,."..."ரொம்ப வேலை,..".
  • "செம கடியா இருக்கு,..".."ஆபிஸ்ல ரப்ச்சர் தாங்க முடியல,.."...
  • "சே! இதுக்கு "நான் கடவுள்" ருத்ரன் மாதிரி "அஹம் பிரம்மாஸ்மி"ன்னு போகலாம் (ஆனா,அதுக்கு முடி நீளமா வளர்க்கணும்.அப்பறம் டை வேற அடிக்கணும் :-) )",..
  • "என்ன உலகம் அங்க கொல்றாங்க,..இங்க சுருட்றாங்க,.அது,..இதுன்னு,..."
இப்படி, நம்முடைய வருத்தங்களுக்கு பல வித காரணம் சொல்றதுக்கு முன்னால...உண்மையான ஒரு காரணத்த சொல்லுவோமா...?

அதாவது நமக்கே தெரியாத "அந்த" ஒரு காரணத்த சொல்லுவோமா? "நான் என் வாழ்க்கைல சில, பல பேர்களை மன்னிக்கல!..அவங்க செய்தத மறக்கல" அப்படீங்கற காரணத்த.

என்னது,...மன்னிப்புக்கும் மனுஷ தினசரி வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்" ங்றீங்களா? இருக்கே..... எனக்கு தெரியுமே...ஆமா..நானே கண்டுபிடிச்சேன். ")))

"வந்துட்டாய்ய உளவியல் நிபுணரு,..காசு வாங்காமா கன்சல்டிங்க் பண்ண"ன்னு கிண்டல் பண்றவங்களுக்கு நான் பணிவ சொல்றதெல்லாம் இது தாங்க. நான் என் வாழ்க்கைல கஷ்டம் தந்த முக்காவாசி பேர மன்னிச்சிட்டேன்,..மிச்ச காவாசி பேர மறந்துட்டேன்....(சாமி புண்ணியத்துல இப்ப எனக்கு கூட இருக்கிறவங்களெல்லாம் நல்லவங்க தான் :))

இப்பக் கூட சில பேர் சொல்லலாம் "ஓ,..இப்படிக் கூட தன்ன பத்தி பெருமையா தம்பட்டம் அடிச்சிக்க முடியுமான்னு". அவங்களுக்கு நான் சொல்ற்தெல்லாம் "அன்புடையீர்,.தினம் தினம் சமைக்கிறோம்,..வெங்காயம் வதக்கிறப்போ,..அந்த பதார்த்ததுக்குத் தேவையான உப்பப் போட்டு வதக்கினா சீக்கிரம் வெங்காயம் வெந்திடுமுன்னு தெரிஞ்சா நாம நாலு பேருக்கு சொல்ல மாட்டோமா...? சொல்லுங்க? நான் சொல்லுவேன்பா...:-) ( வெங்காயத்த வதக்கிறப்பல்லாம் என்ன நினைச்சாலும் நினைச்சுப்பாங்க..:)

சரி சரி மன்னிக்க வருவோம்...
வாழ்க்கை ரொம்ப சீக்கரம் சீக்கரம ஓடிக்கிட்டு இருக்கு. இல்ல, இல்ல பறந்துகிட்டு இருக்கு. இதுல சும்மா தேவை இல்லாம வருத்தத சுமந்துகிட்டு. சந்தோஷமா இருக்கத் தான வாழ்க்கை? கடவுள் எவ்வளவு ரசிச்சு, ரசிச்சு இந்த உலகத்த, உங்கள படைச்சிருக்கார், "என்ஜாயா போடுறத விட்டுட்டு" சும்மா,..ஏன் மத்தவங்க நமக்கு பண்ண தப்பையே நினைச்சு நம்மளேயே நாம ஏன் தண்டிக்கனும் சொல்லுங்க?

"REVENGE IS SWEET"ன்னு சொன்னவன்னு மன்னிக்க பழகிருந்தா என்ன சொல்லிருப்பார் தெரியுமா? "FORGIVING IS BLISS"ன்னு :-)


இந்த உலகத்துல புதுசா வரப் போற பிரச்சினையின்னு எதுவுமேயில்ல. எல்லா பிரச்சனையும் ஏற்பட்டாச்சு. எல்லாத்துக் குரிய தீர்வுகளும் கண்டுபிடிச்சாச்சு..அதுல ஒரு அருமையான தீர்வு "மனுஷன் சந்தோசமா இருக்க தேவை மன்னிக்கும் மனப்பான்மை".

2000 வருஷத்துக்கு முன்னாலயே, ஏசு சாமி என்ன சொன்னாரு "ஒருத்தன் ஒரு கன்னத்துல அடிச்சா இன்னொரு கன்னத்த காண்பி"ங்கறாரு. மன்னிச்சிரு,..ஒரு சான்ஸ் கொடுன்னு சொல்றாரு.

மனசத் தொட்டு சொல்லுங்க "உங்கள யாரோ, இப்ப நீங்க கூட, மன்னிக்க முடியாத விஷயத்த மன்னிச்சிருக்காங்க தானே?"...ஹேய்,..பொய் சொல்லக் கூடாது,....:-)
அப்போ ...சின்ன வயசுல...அந்த சம்பவம்,..ஞாபகம் வருதா...? நல்லா யோசிங்க வரும் வரும்.. :-)))

சரி இவ்வளவு சொல்லியும் புரியலைன்ன,..நம்ம உலக நாயகன் கமல் விர்ர்ர்ர்ர்ருமாண்டீல சொன்னத சொல்றேன்,..
"மன்னிக்க தெரிஞ்சவன் மனுஷன் (மன்னிப்பு கேட்கறவன் பெரிய மனுசன் (இல்ல வீரன் :))))

மன்னிச்சு எல்லோரும் மனுசனாவோம்,..வாங்க :-)))

(முடியாதுன்னு பின்னூட்டம் போடறவங்களெல்லாம்,..ஏலியன்ஸ் :( )

தப்பா ஏதாவது சொல்லிருந்தா மன்னிச்சிப்போட்டுருங்கண்ணா..வாரேன்ன்ன்!!!

டி.ஸ்.கி
மன்னிப்பத் தவிர இன்னொரு விஷயம் வாழ்க்கைய சுவாரசியம் ஆக்குமே, :-)அது என்ன..?
அது தாங்க, பாதி கோலிவுட் படத்தோட கதை அவுட்லைன்... YES,..பரத் சந்தியா நடிச்ச மேட்டர்...ம்ம்..கரெக்ட்,..காதல் ....(ஊய்,...ஊய்...நீங்க சீட்டி அடிக்கிறது கேட்குது,...ஆனா,..அது இன்னொரு பதிவுல :)))

Wednesday, April 22, 2009

யார் ஹீரோ,..

நல்ல வேளையா,..அன்பு நண்பர் வாசன் அந்த புகைப்படத்தில் இருப்பது யாருன்னு கண்டுபிடிச்சார்...ஏன்னா யாரும் கண்டுபிடிக்காத வரைக்கும் நான் அடுத்த பதிவு போடக்கூடாதுன்னு வச்சிருந்துதேன்..


நான் என்ன சொல்ல வந்தேனா...நாம எவ்வளவு மெனக்கிட்டு சினிமா பிரபலங்களோட வாழ்க்கை வரலாற தெரிஞ்சி வச்சிருக்கோம்,...ஆனா "நான் ஒரே ஒரு கடவுளைத் தான் வணங்குகிறேன்,..அதன் பெயர் அன்பு"ன்னு சொன்ன அந்த பாசாமான தாயைப் பத்தி எத்தனை பேரு தெரிஞ்சி வைச்சிருக்கோம்.



பார்த்திபனின் கிறுக்கல்கள் புத்தகத்துல அன்னையப் பற்றி ஒரு சின்ன கவிதை உண்டு. சரியா ஞாபகம் இல்ல இருந்தாலும் இப்படித் தான் பொருள் பட சொல்லும்

"என்னை மட்டும் கருவில் கொண்டதால் அவள் எனக்கு அன்னை
நீ
அன்பை கருவில் கொண்டதால் உலகிற்கே அன்னை"

உண்மையிலே அவர் கவிதையின் கடைசி வரி முத்தாய்ப்பா முடியும். ஞாபகம் இல்லாததால் அந்த டச் கொண்டு வர முடியல

அன்னை 12 வயதுலேயே ஒரு அழகான கனவு மற்றும் கையில் 3 வெள்ளிகளை வைத்துக் கொண்டு சொன்னார்களாம்." எனக்கொரு கனவுண்டு,..இந்த உலகில் ஏழை எளியோரைக்கு பணிவிடை செய்யும்/காக்கும் கனவு" என்று. அப்போது அவரை எள்ளி நகைத்தவரிடம் மிகத் தெளிவாக மிக கனிவாக சொன்னாரம் "கனவு என்னுடையது அதை நிறைவேற்றும் கடமை ஆண்டவர்க்குரியது, அவர் துணையுடன் என் கனவைச்செவ்வனே செய்து முடிப்பேனேன்று."

அன்னைஅவர்கள் அல்லவா உண்மையான ஹீரோயின் . பல் துலக்க பன்னீரும், குளிக்க பிஸ்லரியும் கேட்கும்,..டாக்டர் ஆகிருப்பேன்,..கேன்சருக்கு மருந்து கண்டுபிடிச்சிருப்பேன்னு பீலா விடும் ஹீரோயின் ஹீரோக்களின் துதிகளை எப்போது விடுவோம்.

ஹீரோவின் விளக்கம் என்ன தெரியுமா "ஒருசாதரண மனிதன் அசாதரணக் காரியத்தை(நல்ல) செய்ய விழையும்/துணியும் போது ஹீரோ ஆகிறான். "

ஆமானுஷ்ய சக்திகள் படைத்தவனல்ல ஹீரோ,..அவன் காமிக் புக்குகளில் ஸ்பைடர் மேனாகவும், மாயாவியாகவும், சூப்பர் மேனாகவும் குழந்தைகளுக்கு பூச்சாண்டிக் காட்டிக் கொண்டுருப்பவன்.

அன்னையைப் போல இன்னும் பலர் தாம் வாழ்வின் உண்மையான ஹீரோ!!!

இவர்களைப் பற்றி நாம் எப்போது இளையவர்களுக்கு சொல்லித்தரப்போறோம்...இல்லை நமக்குச்சொல்லும் அளவுக்குத்தான் இவர்களைப் பற்றித்தெரியுமா?

குழந்தைகளுக்கு ரோல் மாடல்களை வெளியில் தேடுவானேன் நாமே ஏன் ஒரு ஹீரோவாகாக் கூடாது,....?

Monday, February 23, 2009

அன்பச் சொல்றேன்..அன்பாச் சொல்றேன்!

வாழ்க்கையப் பத்தி தத்துவம் சொல்ல எனக்கு வயசில்ல. ஆனா, நான் ரசிக்கிற இந்த வாழ்க்கைய பத்தி சுவாரசியமா... கொஞ்சமாய் தமிழ் வரும்ங்கர தைரியத்துல சொல்ல முயலுகிறேன்.


தூயத் தமிழ்ல சொல்லாம. கொஞ்சம் அப்படி, இப்படி, பேச்சுத்தமிழும், ஆங்கிலமும் கலந்து கட்டி கூட்டாஞ்ச்சோறு ஊட்ட வாரேன். வாங்க! ஒரு உருண்டை வாங்கிக்கங்க... :)

நான் இந்த வாழ்க்கையில அன்பத் தவிர ரொம்ப அதிசயமான விஷயத்த இன்னும் பாக்கலீங்க.
அன்பக் கொடுங்க, உங்களுக்கு இன்னும் பல மடங்க திருப்பிக் கிடைக்கும்ன்னு பொய் சொல்ல மாட்டேனுங்க. எப்பாவாது கிடைக்கலாம்...ரொம்ப நேரம் கிடைக்காது...

ஆனா, எந்த நிலையிலும் "அன்ப தந்த நீங்க" நிம்மதியாவும் சந்தோசமாவும் இருப்பீங்க...

அட நிஜமாத்தேன் சொல்றேன்..!

சரி...நாலறிவு உள்ள ஜீவன்லருந்து ஆரம்பிக்கிறேன் (ஆமா..செடியெல்லாம் நாலறிவு தான? )


சரி, எல்லாரும் மேல பாருங்க.. (ப்ளாஷ்பேக்)


அப்ப நான் கல்லூரி முடிஞ்சு வீட்ல இருந்தேன். எங்க வீட்டுக்கு முன்னாடி, ஒரு மஞ்ச பூ பூக்கும் செடின்னு சொல்லி ஒண்ணு வைச்சிருந்தாங்க அம்மா, 4 வருஷமா...

செடி தள தளன்னு வளந்திருட்ட்ச்சு. ஆனா, பூவே இல்ல.

அன்னைக்குன்னு பார்த்து கீர விக்க வந்த அண்ணன் அம்மாக்கிட்ட
"என்ன செடிக்கா இது,..இவ்வளவு அழகா இருக்கே..பச பசேலுன்னு" சொன்னார்.

அம்மா "எங்க..பூ தான் பூக்க மாட்டேங்குத்துன்னு" சொன்னான்ங்க வருத்தமா.
"வேர் ரொம்ப ஆழம் ரொம்ப போறதுக்குள்ள வெட்டிருங்கக்கான்னு" அவரு வேட்டு வச்சிட்டு போய்ட்டார்.

எனக்கா வருத்தாமாப் போச்சு.


சரின்னு..தினம் தண்ணி ஊத்தறப்போ அது கிட்ட பேச ஆரம்பிச்சேன்,..
காலைல பேசுவேன்...சாயங்காலம் பேசுவேன்,..சமயத்துல மாடிக்குப் போற படிக்கட்டுல விழுற அது கிளையா மடில வச்சிக் கொஞ்சி கதை பேசுவேன்.

அது கிட்ட சொல்லுவேன்
"ஹேய்..நீ பூ பூத்தா எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா...இல்லைனா..உன்ன வெட்டிப் போட்டுருவாங்கப்பா. சொல்லிட்டேன்னு!" ஆரம்பிட்ச்சு..ஏதேதோ பேசுவேன்..


அப்பறம் 3 வாரத்துல சென்னைக்குப் போய்ட்டேன். 1 மாசம் கழிச்சு திரும்பி வந்து பார்த்தா...வந்து பார்த்தா...ஒரு பச்ச இலை கூட தெரியாமா செடியெல்லாம் அத்தனை மஞ்சப் பூ...

நிஜமாத்தான் சொல்றேன்...நிஜம்ம்ம்ம்ம்மா!!!

எங்க அம்மா என் கதைய நம்பல. அப்பா மட்டும் தான் நம்பினாங்க. எங்க பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டுகாரங்கெல்லாம் அந்தச் செடி விதை வாங்கிப் போட்டாங்க...எல்லா வீட்லயும் உடனே பூத்திருட்ச்சு.

அப்பறம்,.. நான் தான் இன்னும் பல நூறு வருஷதுக்கும் சேர்த்து அதுக்கு அன்பச் சொல்லி அனுப்பிருக்கேனே..பூக்காதா பின்னே?

ம்ம்ம்..சொல்ல மறந்துட்டேனே...அம்மாவும் நம்பினாங்க. எப்படியா?

எனக்கு ஒரு டெஸ்ட் வச்சாங்க. கிராமத்துல இருந்து கன்னு கொண்டு வந்து வச்ச காய்ககாத, எங்க பின் கட்டு அரை நெல்லி மரத்தையும் பேசியும் தடவிக்கொடுத்தும் நான் காய்க்க வச்சப்போ. :)

நிஜமா..அன்பு மட்டும் தாங்க நிதர்சனம்!!! நம்புறீங்களா ?

எனக்குத் தெரியும் உங்க கிட்டயும் அன்பச் சொல்ற ஒரு
ஒரு சின்னக் கதை இருக்குன்னு....யோசிச்சுப் பாருங்க :)


"அந்த கரையில்

புரளும் அலை போல் தான்

என் அன்பும்..



தொட்டு விட போவதாய்

எண்ணி எண்ணி ஓடி வருவேன்..


இன்னமும் தூரமாய் விலகும்

கரையினை நோக்கி



ம் ஹும்....விடமாட்டேன்...

இன்னும் ஓயாமல் வீசுவேன்

அதிவேக அன்பு அலைகளை"