Thursday, May 10, 2012

ரெடி, லைட்ஸ், கேமரா, ஆக்க்ஷன் - 1


சினிமாவும் நானும் பகுதி எழுதனும்னு நினைச்சவுடனயே எனக்கு கெக்கபிக்கேன்னு சிரிப்பு தான் வந்துச்சு. அப்பறம் நான் பெரிய பாலசந்தர், பாலுமகேந்திரா என்னுடைய சினிமா அனுபவங்கள தொகுத்து வழங்கறதுக்கு... ஆனாலும் சொல்லுவேன் J உங்களுக்கு பிடிக்குமென்ற நம்பிக்கையில்...( நம்பிக்கைய விட நப்பாசை தான் சரியான வார்த்தை J)

சரி எல்லாரும் மேல பாருங்க...ஸ்ஸொய்ங்... ஸ்ஸொய்ங்...(ஃப்ளேஷ்பேக் அது இல்லாமா சினிமாவா..J)... 

இல்லைனா இந்த படத்தப் பாருங்க (படத்தப் பார்த்து தலைய சுத்தி வயத்தப் புரட்டினா நான் பொறுப்பில்லப்பா)

அப்போ எனக்கு ரொம்ப சின்ன வயசு...சும்மா நாலுன்னு வச்சிக்கோங்களேன். கிராமத்தில இருந்து எங்க பாட்டி அதாவது என் அப்பாவை பெற்ற அம்மா வருவாங்க. “அப்பத்தான்னு தான் கூப்பிடனும் நான் ரொம்ப ஒல்ட் ஃபேஷனாருக்குன்னு பாட்டி தான் கூப்பிடுவேன். 

இப்ப நடிகர் சூர்யா விஜய் டிவில அவங்க பாட்டிய “ஆத்தான்னு கூப்பிடுவேன்னு ஸ்டைலா சொல்றப்ப தான் தோணுது மிஸ் பண்ணிட்டோமோன்னு. 

அந்த பாட்டி வீட்டுக்கு வந்தா எனக்கு செம ஜாலி பல காரணங்களுக்காக

1.       பாட்டி ஒடம்பெல்லாம் ஒரே டாட்டூஸ். எனக்கு அத ஆராய்ச்சி பண்ணிரது ஒரு பெரிய பொழுது போக்கு. அவங்க காது வளர்த்து பெரிய தண்டட்டி போட்டு, காதெல்லாம் பல இடங்கள குத்தி “கொப்பு, “முறுகுன்னு அழகழகான பேருடைய பல நகைகள் காதுல போட்டிடுப்பாங்க. நல்ல ஒல்லியா, உயரமா, இடுப்புக்கு கீழே விழற தல முடிய கோடாலிக் கொண்டப் போட்டுக்கிட்டு சரியா “அத்லெடிக் பில்ட்டா இருப்பாங்க...சங்கத் தமிழ் பெண்கள் முறத்தால புலிய விரட்டினது உண்மையின்னு அவங்களப் பார்த்தா 100% நம்பலாம்.



கிட்டத்தட்ட அவங்க எனக்கு ம்யூசியம் மாதிரி. அவங்கள சும்மா வளைச்சு, வளைச்சு தொட்டு தொட்டுப் பார்த்து, கேள்வி மேல கேள்வி கேட்டு ஆராய்ச்சி பண்ணுவேன்.



       2. அடுத்த காரணம் வித்தியாசமான கிராமத்துக் கதை சொல்லுவாங்க. எந்த குழந்தைங்க புத்தகத்திலயும் வரதா,..வர முடியாத சமூக நீதிக் கதைகள். உ.தா. ராசாவுக்கு துரோகம் பண்ணின ராணி. அதக் கண்டுபிடிச்ச மந்திரி...இப்படி J

3   3. பேத்தின்னு பார்க்கமா என்னை ரொம்ப வம்பிழுப்பாங்க. சினிமா தமிழ்ல சொல்லனும்னா கலாய்ப்பாங்க..
  4.ஆனா இதெல்லாம் விட அவங்க வரவ நான் ரொம்ப எதிர்பார்த்துக் கிடக்கிரது எதுக்கு தெரியுமா...சினிமா...:-) (அப்பாடா,..டாப்பிக்கிக்கு வந்துட்டேனா..J )

   பாட்டிக்கு நான் தான் சினிமா கம்பேனியன். அதுவும் செக்ண்ட் ஷோ தான் போவோம். அதுக்காகவே,..தூங்காம முழிச்சிருப்பேன். பாட்டி சாப்பிட்டு முடிச்சு, வெத்தலப் போட்டு அப்பாக் கிட்ட எல்லாக் கதையும் பேசி ஒரு மாதிரி ட்ன் ஃபோர் த டே (Done For The Day) ஆகும் போது பாட்டி சினிமா போக ரெடியாவாங்க. அவங்க பின்னாலயே திரிவேன். எங்க விட்டுட்டுக்கிட்டுட்டுப் போய்ட்டாங்கன்னா. அம்மாவும் எப்படின்னு தெரில என்னைய ஓண்ணும் சொல்லாம அவங்க கூட அனுப்பி வைச்சிருவாங்க.

   ஆனா இதுல ஒரே ஒரு பிராப்பளம் பாட்டி லைக்ஸ் ஒன்லி பிளாக் & ஓயிட் மூவீஸ். நான் கலர் படம் மட்டும் தான் பார்ப்பேன். 

   “நாம தான் ஃபிரியாக் கொடுத்த ஃபினாயிலக் கூடக் குடிப்போம்லா J... இப்படி சொல்வேன்னு நினைக்காதீங்க. 
   
 பாட்டி கூட சினிமா போற அனுபவம் ரொம்பவும் அலாதியானது. அதுக்காகத்தான் கண் முழிச்சு காத்திருந்து போவேன்....

   ஏன் அலாதியானதுன்னு அடுத்த பதிவுல சொல்றேன்...

Thursday, April 26, 2012

ஒரு கண்ணாடி, ஒரு கட்டில்...


என் அறையில்...
கண்ணாடியும், கட்டிலும்
உன்னைப் பற்றி புரணி பேசிற்று...

“எனக்கு கையிருந்தால்
 கண்களை மூடிக் கொள்வேன்
இவன் கொட்டம் தாங்க வில்லை

“ம்ம்க்கும்......
 எனக்கு கால் இருந்து என்ன பயன்?
 ஓட முடியவில்லையே...!!!” :-(

அமர்க்களம் செய்கிறாயேடா...!!!

Wednesday, March 21, 2012

சிறியதாகவும்,..பெரியதாகவும்..



ஹிட்லரின் அட்டுழியத்தையும்...
ஹிரோஷிமா, நாகாசாகி அழிவையும்...
இரட்டைக் கோபுர நாச வேலையின் போதும்
அவன்..
வேதனிப்பாதாய்ச் சொல்லிருப்பான்!

நாமும் கூட அவனுடன்
உச்சுக் கொட்டி
திட்டித் தீர்த்திருப்போம்...
முள்ளிவாய்க்காலில் அவன் முகத்திரை கிழியும் வரை!

முகபாவம், உடை, நடை, தோரணை என
நம்மைப் போலவே
நம்மிலும் பல
ராஜபக்க்ஷேக்கள்....
சிறியதாகவும்,..பெரியதாகவும்...

Monday, March 19, 2012

கல்லடி

அந்த அரை சாமத்து வேளையில் அவனுக்காய் காத்திருந்தாள். கண்களில் மையை இன்னும் ஒரு முறை அழுந்த இட்டு விட்டு, லெபானிய வணிகன் ஒருவன் விற்காமல் போய்..., ஊர் திரும்பி போகிற போக்கில் இவள் புனைந்திருந்த பானைகளுக்கு மாற்றாய்த் தந்த வாசனை திரவியம் பூசிய அவள் நீண்ட அடர்ந்த முடிக்கற்றைகளை நீவியவாறு யோசனையோடு காத்திருந்தாள்.

நீளவாக்கான மாசறு முகம், செதுக்கியது போன்று மூக்கு, கரு நீல விழிகள். அவை அயர்வுடன் சொருகும் போதெல்லாம் மயக்கத்தில் கிறங்குகிறாள் போலும் என எண்ணத் தோன்றிற்று. நல்ல கோதுமை நிறத்தில் சராசரி பெண்ணின் உயரத்தைக்காட்டிலும் கொஞ்சம் உயரமாய், அழகி தான் அவள்.

எப்போதும் போல அவள் எண்ணங்கள் தறிக்கெட்டு பின்னோக்கிப் போயிற்று. பதினேழு பேரில் ஒருத்தியாய் பிறந்தது முதல், அம்மாவின் முத்தம், மிக இளப்பிராயத்திலயே செத்துப் போன தனக்கு நேர் மூத்த அக்காவுடன் விளையாடிய சிறு வயது ஞாபகங்கள், பின் அந்தப் பாலை பூமியில் தன் பதின்மூன்று வயதில் ஒரு 45 வயது வாலிபற்கு நான்காவது மனைவியாய் வாய்த்தது வரை மனம் அலைந்து திரிந்து ஆர்ப்பரித்தது.
ஆட்டு மந்தைகளோடு ஆடாய்த்தான் போயிருந்தாள், கனவுகள் அவளைச் சிறையில் எடுக்கும் வரை. மனதிலும், உடலிலும் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அவள் மண வாழ்க்கை மருந்தாய் அமையவில்லை. இதோ,...இப்படி பேரிட்சை பழக்காரனின்,..பேரிச்சைக்கு இஷ்டப்பட்டு ஆட்பட்டுக் கொண்டாள்.

பரத்தையாம்,...ஊரார் அவளுக்கு வைத்த பெயர் ஒன்றும் அவளுக்கு வலிப்பாதாய் இல்லை. அவனுடன் கழிந்த பொழுதுகள் அவள் தாய், தமக்கையின் ஞாபகங்களை மீட்டெடுத்தன. இப்படி இருப்பதில் அவள் தனக்கு சந்தோஷம் என்றே எண்ணிக் கொண்டாள். யோசிக்கக் கூடாத விஷயங்களை யோசிக்கவே... கூடாதென்று முடிவு கொண்டிருந்தாள். அவளுக்கு அவள் நியாயம் அவ்வளவு தான்.

சே,...என்னாவாயிற்று,..இத்தனை நேரம். வரமாட்டானோ என்னவோ என்றேண்ணிய அடுத்த நொடியில் வாசலில் சத்தம்.

வந்து விட்டிருந்தான். மதுவின் வாடை சற்றுத் தூக்கலாய் இருந்தது குடித்து கும்மாளமிட்டு விட்டு வந்திருப்பான் போலும். மதுவின் வாடை அவளையும் வாட்டிற்று.ம்ம்ம்...இன்று கதைகள் பேச நேரமில்லை. குடித்தவனிடம் என்ன சொல்ல அவன் என்ன கேட்க.
வழக்கமான அடுத்த விஷயங்கள் மளமளவென அரங்கேறிற்று, சற்று அயர்ந்து உறங்க எத்தனிக்கையில் “தட தட” வென கதவு அதிர்ந்தது. என்ன நடக்கிறது என அறிவதற்குள் வாட்ட சாட்டமாய் மூவர் கதவை பெயர்த்துக் கொண்டு உள்ளே வந்திருந்தனர், அதிரடியாய் அவளை அரைகுறை ஆடையுடன், தலைவிரி கோலமாய், அவளைத் தொடுவது பாவம் போன்று, அவள் தலை மயிற்றைப் பற்றி தெருவிற்கு இழுத்து வந்தனர். கூக்குரலிட்டவாறு அவள் இன்னதென்று சொல்லி அழைக்க முடியாத உறவினனைத் திரும்பித்திரும்பிப் பார்த்தனள்.

அவன் பயந்து போய் விட்டிடுந்தான் கைகளும் கால்களும் நடுங்க அங்கியைப் பற்றியபடி எங்கோ பார்த்த படி நின்று கொண்டிருந்தான், அவள் முகத்தை வருடி, நெற்றி முடிக்கற்றைகளை விளையாடும் அந்த கரங்களை இறுக்கமாய்க் கட்டியபடி.
வெட்கமும், கழிவிரக்கமும், வேதனையும் பிடுங்கித் திங்க வீதியில், முக்காட்டுத் துணியோடு இன்னும் பலவற்றைத் தொலைத்தவளாய், விதியை நொந்த வாறு கண்ணீரும் கம்பலையுமாய் நகரின் நடுவில் விளங்கிய முக்கிய பொட்டல் வெளியில் எதன் பொருட்டோ கூடிய கூட்டத்திற்கு நடுவே அவள் இழுத்து வரப்பட, சரியாய் விடிந்திருந்தது
தலை நிமிர்ந்துப் பார்க்க வெட்கித்து,..அழுகையினால் விக்கித்து அவள் அந்த பெரும் புழுதியில் வீழ்ந்துக் கிடந்தாள் கந்தலாய். சல சல வென கூட்டத்தின் எள்ளல் அவளை மெல்லச் சாகடித்துக் கொண்டிருந்தது. நடப்பது என்னவென்று அறியாமல் அவள் அசைவுற்றுக் கிடந்தாள்.

பரிசுத்த வேதாகமத்தை படித்துக் கரைத்துக் குடித்திருந்த வேதபாரகரும், பரிசேயரும், அங்கே நடு நாயகமாய் இருந்தவரை நோக்கி உரத்த குரலில் உரைத்தனர் “போதகரே! இதோ இந்த பெண்ணானவள் ஒரு பரத்தை. இன்று அதிகாலை கையும் களவுமாக பிடிக்கப்பட்டவள். இப்படியானவர்களை கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, இதற்கு நீர் சொல்லுகிறீர்?”
விதியை அறியும் பொருட்டு அவள் மெல்ல கண்ணுயர்த்திப் பார்த்தாள். ஆங்கே, அவள் கண்ட காட்சி அவளை ஒரு கணம் தன்னிலை மறந்து சிந்தனையில் ஆழச் செய்தது.





யார் இவர்.?...
தன்னைச் சுற்றி நடக்கும் இத்தனை களபரேமும் பாதிக்காதவராய்,..
அமைதியின் உருவாய்,..கனிவைத் திருமுகமாய்,..கருணையைக் கண்களாய்க் கொண்டவராய்,..இவர் யார்..?

இரும்பான இதயமும், இறுமார்ந்த இதயமும் இவர் பிரசன்னத்தில் இளகக் காத்திருக்கும்...ஈன்றெடுத்த தாயைப் போலவும், பேணி வளர்க்கும் தந்தைப் போலவும்,..ஒரு சேரத் தோன்ற வீற்றிருக்கும் இவர் யார்.?

அங்கே அவள் காண்பது ஞானத்தின் ஒளியா,..இல்லை அதிகாலையில் உதித்த இன்னொரு ஞாயிற்றின் ஒளியா?...யார் இவர்?

மனிதன் போலவும் அம்மனிதனைப் படைத்த தேவன் போலவும் விளங்கும் யார் இவர்?...
அவள் அறிந்த மொழியின் எந்த வார்த்தைகளாலும் எப்படி முயன்றாலும் விவரிக்க இயலாத இயல்பினனைக் கண்டாள்.

ஒரு கணம் அவள் தான் தேர்ந்தெடுத்த வாழ்வியலை நினைத்து தன்னை அற்பமாகவும் அவர் அண்டையில் அத்தனை நெருக்கத்தில் அவரைக் காணக்கிடைத்ததை பாக்கியமாகவும் கருதினாள்

புரிந்தது புரியாமலும், அறிந்து அறியாமலும், தெரிந்தும் தெரியாத நிலை அவளுக்கு...
அந்த குழப்பதிலும் தெளிந்த மனநிலை. கீழே கிடந்தவள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்துக் கொண்டாள்,..அவள் வாழ்வின் முக்கிய தருணமிது என்று ஏதோ சொல்லிற்று.
வேதபாரகரும், பரிசேயரும், திரும்பத் திரும்ப அவர்கள் சொன்னதைச் சொன்னபடி இருந்தார்கள் பொறுமையற்றவர்களாய்..

அவரோ மிக நிதானமாக புழுதியில் எழுதியபடி இருந்தார்.
வேதபாரகரும், பரிசேயரும் இன்னமும் அழுந்தச் சொல்லக் கூட்டமும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டது

புழுதியில் எழுதுவதை ஒரு கணம் நிறுத்தி அவர்களை நோக்கிப் பகர்ன்றார் “உங்களில் யார் பாவம் செய்யாதவரோ அவர் இவள் மேல் முதலாவது கல்லேறியக்கடவன்” என்று சொல்லி மறுபடியும் குனிந்து தரையில் எழுதினார்.

அதைக் கேட்ட கூட்டம் ஒரு கணம் ஸ்தம்பித்த மாத்திரத்தில் வேதபாரகரும், பரிசேயரும் அவர் சார்ந்தவர்களும் இனி அவர்கள் தந்திரம் வேலைக்காகாது என்று அவ்விடத்தை விட்டு நீங்கிச் சென்றனர்.

நசரேத்து பெருமகனார் சோதித்தக் கேள்வி கூட்டத்தின் மனசாட்சியை வருத்த முதலவதாக பெரியோரும் பின்னர் சிறியவர்களும் சென்றனர்.

பரம்பொருள் தந்த அரும்பொருளாம் இயேசு பிரானும், அலைகிழிக்கப்பட்ட அந்த பாவப்பட்டப் பெண்ணும் அந்த வெளியில் தனித்து இருந்தனர். இயேசு பிரான் நிமிர்ந்து அந்தப் பெண்ணைத் தவிர வேறொருவரையுங் காணாமல் “பெண்ணே! உன் மேல் குற்றஞ்சாட்டியவர்கள் எங்கே? ஒருவன் கூட உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா?” என்றார்.

நடக்கும் ஒவ்வொரு காரியமும் கனவுலச் சஞ்சாரமா இல்லை தன் அறிவுக்குக்கெட்டாத மெய்யா என்ற நிலைக்கொண்டவளாய்க் கிடந்தவள் தயங்கியபடி மெல்ல வாய் திறந்து உரைத்தாள் “இல்லை, ஆண்டவரே”.

இயேசு அவளை நோக்கி “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் திர்க்கிறதில்லை. நீ போ. இனி பாவஞ் செய்யாதே” என்றார்.

அவ்வளவு தானா,...? என் பாவங்கள் மன்னிக்கப்பட்டதா...?

எனக்கு இன்னொருப் பிறப்பா,..? இனி யாரும் என்னை எள்ளி நகையாடுவதில்லையா,..?

நான் உமது சபையில் ஒத்துக் கொள்ளப்பட்டேனா,..? என் வாழ்வை நேர் செய்ய இன்னொரு சந்தர்ப்பமா,..?

எனக்காவா...? எனக்காவா,.. நீர் பரிந்து பேசினீர்,..?

இதோ இந்தக் கூட்டத்தில் என்னை ஆண்டு அனுபவத்தின் இருந்திருப்பானே...அவன் வர வில்லையே...?

ஒரு கணத்தில் சாவின் விளிம்பில் இருந்து காத்து, புது வாழ்வு தந்தாரே,..யார் இவர்,..?

இவர் மன்னித்த மாத்திரம் என்னுள்ளம் உடைந்து கதறுகிறதே...

நெஞ்சு வெடிக்க, உதடு துடிக்க, வார்த்தைக்குள் அடங்காத அவளது உள்ளக் கொதிப்பை தாரை தாரையாய் தன் கண்ணீரினால் நன்றியை தெரிவித்தாள் அந்த மன்னிக்கப்பட்ட பேதை.

மெதுவாய் எழுந்து நடக்கலானாள்,..உலகமே புதிதாய்த் தோன்றிற்று,..சிலு சிலுவென தென்றல் வீசி அவள் ஊனையும் உயிரையும் ஆற்றிற்று,..வழியில் அவள் வலியறிந்த யாரோ கொடுத்தனுப்பினார் போலும்,.. ஒரு சிறுமி ஒரு முக்காட்டுத் துணியை அவள் மீது போர்த்தி விட்டு ஓடினாள். அது அவளுக்கு அவள் மன்னிப்புக்குக் கிடைத்த அடையாளமாய் அங்கிரமாய்த் தோன்றிற்று...எட்டி நடைப் போட்டாள்...இனி வாழ்வு அவள் பக்கம்....

Saturday, March 17, 2012

நிபந்தனையற்றக் காதல்!




விவாதங்களும்...
வெட்டிக் கோபமும்...
விதண்டாவாதப் பேச்சுக்களும்..,
படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தன.

பின்,
எப்படிச் சொல்வது ?
அவன் சொன்னது பொய் என்பதை
நான் அறிவேனென்று!



**நிபந்தனையற்றக் காதல்:
எப்பொழுதும், எது நேரிடினும் நேசிப்பேன்
பி.கு: என் கவிதைகள் சொந்த அனுபவம் அல்ல :-))

Thursday, March 15, 2012

அர்த்தராத்திரி ஊர்வலம்



கவிதையா...?
அவனைப் பற்றியா...???
சத்தியமாக அவன் பெயரைக் கூட உச்சரிக்க கூடாதென
எழுந்து எட்டி நடை போட்டேன்....அலட்சியமாய்.

மெதுவாய் ஒரு குட்டிக் கவிதை,
தவழ்ந்து வந்து ஒட்டிக் கொண்டது....

கண்டும் காணததாய் இன்னும் வேக நடை போட்டேன்
தர தரவென என் கால் பிடித்து
மண்ணில் புரண்ட படி அழுது முரண்டது...
பாவமென தூக்கி இடுப்பில் இடுக்கிக் கொண்டேன்!

இன்னும் சில அடியில் ....
ஒரு செல்லக் கவிதை மெல்ல அடிப்போட்டு
கையைக் கட்டிக் கொண்டது...
சரி வந்து தொலையட்டுமென விட்டு விட்டேன்!

பின் ஒரு கவிதை தோள் அணைத்துக் கொண்டது,...
ஒன்று கழுத்தைக் கட்டிக் கொண்டது...
இன்னுமொன்று முகத்தோடு முகம் இழைத்தது..

இப்படியாய் கழிந்த அடுத்த சில நொடிகளில்
அந்த நிசப்த இரவில்....
ஒராயிரம் கழிவிரக்க கவிதைகளோடு ஊர்வலம் போய்க் கொண்டிருந்தேன்...ஒற்றையாய்

Monday, October 11, 2010

கடவுளை எழுப்புதல்!

ஓரு கட்டுபாடற்ற மாய உலகில்,...
முடிவிலியில்,...
அதிவேகமாய்,...
முழுமூச்சுடன்,..
பரபரவென பற்றியெரியும் தீக்கொழுந்து போல
என்னை நான் அதிகமாய் நேசிக்கத் தொடங்குகிறேன்,...
சுய நலமின்றி
இனி என் இன்ப துன்பங்களின் சாளரங்கள்
பிறர்க்காய் திறக்கும்...!